Wednesday, April 2, 2014

கண்டேன் மலையப்பனை..



புரந்தரதாசருக்கு 24x7 இறைவனின் சிந்தனையில், அவன் புகழைப் பாடி, அவன் சரிதங்களை பரப்புவதிலேயே கழிந்தது. நினைவில் இருக்கும்போது கோயில்களில் புரந்தரவிட்டலனை தரிசிப்பார். தூங்கும்போது கனவிலும் அவனே வருவான். கனவிலுமா? ஆமாம். அதுவும் எப்படி? நெற்றியில் நாமம்; காது, கை, கால்களில் நகைகள், கலகல என்னும் கொலுசு சத்தம் - இவற்றுடன் அந்த திம்மய்யன் வந்து காட்சியளித்தானாம். வாயுதேவர், பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அந்த பரம்பொருளுக்கு சேவை செய்ய வரிசையாக நிற்கும் காட்சியும் தெரிந்ததாம். இதை அருமையாக வர்ணிக்கும் இந்த புகழ்பெற்ற பாடலை கேட்டு ரசியுங்கள்.

ஏனு ஹேளலி தங்கி திம்மய்யனா பாதவனு கண்டே
கனசு கண்டேனே மனதல்லி களவளகொந்தேனே (ஏனு)

என்ன சொல்வேன் தங்கையே, திம்மய்யனின் பாதங்களை கண்டேன்
கனவு கண்டேனே மனதினில் கலவரம் கொண்டேனே (ஏனு)

ஹொன்ன கடகவனிட்டு திம்மய்ய தா கொள்வ நாமவனிட்டு
அந்துகே பலுக எனுதா என்ன முந்தே பந்து நிந்திதனல்லே (ஏனு)

தங்க வளையல் அணிந்து திம்மய்யன் அவன் பளிச்சிடும் நாமத்துடன்
காலில் கொலுசு அணிந்து என் முன்னே வந்து நின்றானே (ஏனு)

மகர குண்டலவனிட்டு திம்மய்ய தா கஸ்தூரி திலகவனிட்டு
கெஜ்ஜே கலுக எனுதா ஸ்வாமியு பந்து நிந்திதனல்லே (ஏனு)

காதில் தோடுடனே திம்மய்யன் அவன் நெற்றியில் திலகமிட்டு
கொலுசு சத்தத்துடனே ஸ்வாமி வந்து நின்றானே (ஏனு)

முத்தின பல்லக்கி யதிகளு ஹொத்து நிந்திதனல்லே
சத்ர சாமரதிந்தா ரங்கய்யன உத்சவ மூருத்திய (ஏனு)

முத்தால் வேய்ந்த பல்லக்கை யதிகள் (மத்வ ஆச்சார்யர்கள்) தூக்கி நின்றனரே
குடை விசிறியுடனே ரங்கய்யனின் உத்சவ மூர்த்தியை (தூக்கி நின்றனரே) (ஏனு)

தாமர கமலதல்லி கிருஷ்ணய்ய தா பந்து நிந்திதனல்லே
வாயு பொம்மாதிகளு ரங்கய்யன சேவேய மாடுவரே (ஏனு)

தாமரை மலரினிலே கிருஷ்ணய்யன் அவன் வந்து நின்றானே
வாயு, பிரம்மாதி தேவர்கள் ரங்கய்யனின் சேவையை செய்கின்றனரே (ஏனு)

நவரத்ன கெட்டிசித ஸ்வாமி என்ன ஹ்ருதய மண்டபதல்லி
சர்வாபரணதிந்த புரந்தர விட்டலன கூடிதனே (ஏனு)

நவரத்தினங்களால் கட்டப்பட்ட என் இதயக்கோவிலில்
நகைகளால் அலங்காரம் செய்யப்பட்ட புரந்தரவிட்டலன் வந்து நின்றானே (ஏனு)

***

http://www.youtube.com/watch?v=WuEHBdNVodU

***


Monday, March 24, 2014

நடப்பதெல்லாம் நன்மைக்கே...



புரந்தரதாசரின் வாழ்க்கை வரலாறு 

மேற்கண்ட பதிவில், தாசரின் கதையை படித்துவிட்டு வரவும். முதலில் கருமியாக இருந்த தாசர், எப்படி பல்வேறு தத்துவார்த்த விசாரங்கள், வேத சாரங்கள், பகவானின் அவதாரங்கள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பாடல்கள் இயற்றலானார்? அந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம்தான் அதற்கு காரணம். அந்த சம்பவமும் அதே பதிவில் உள்ளது.

தன் பக்தையை கருமியான கணவனிடமிருந்து காப்பாற்ற இன்னொரு மூக்குத்தியைக் கொடுத்த கருணை வடிவானவனைப் போற்றிப் பாட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தாசர். சம்சார சாகரத்தில் மூழ்கியிருந்த அவர், உடனடியாக தம்புரா, கைத்தடி, பிச்சை எடுப்பதற்கு ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் முதன்முதலாக இயற்றிய பாடல் என்று இந்தப் பாடலையே குறிப்பிடுகிறார்கள். தன் இந்த மாற்றத்திற்குக் காரணமான மனைவியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம
ஸ்ரீதரன சேவே மாடலு சாதன சம்பத்தாயித்து (ஆதத்தெல்லா)

நடந்தவையெல்லாம் நல்லதாகவே ஆயிற்று நம்
ஸ்ரீதரனின் சேவையைச் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே பெட்டா ஹிடியுவுதக்கே
மண்டே பாகி நாசுதலித்தே
ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி
தண்டிகே பெட்டா ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

தம்புரா & கைத்தடி (இந்த இரண்டையும்) பிடிப்பதற்கு
தலை குனிந்து வெட்கப்பட்டேன்
என் மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)
தம்புரா & கைத்தடியை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடியுவுதக்கே
பூபதி எந்து கர்விசுதித்தே
ஆ பத்னீ குல சாவிரவாகலி
கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சைத் தட்டு பிடிப்பதற்கு
(நான் ஒரு) பணக்காரன் என்று எண்ணி கர்வத்தோடு இருந்தேன்
அந்த (என்) மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)
பிட்சைத் தட்டை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

துளசிமாலே ஹாகுவதக்கே
அரசனெந்து திருகுதலித்தே
சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு
துளசிமாலே ஹாகிதனய்யா (ஆதத்தெல்லா)

துளசிமாலையை அணிந்துகொள்வதற்கு
(நான் ஒரு) அரசன் என்று நினைத்து திரிந்து கொண்டிருந்தேன்
அந்த தாமரைக் கண்ணனான புரந்தரவிட்டலன்
(என் கழுத்தில்) துளசிமாலையை அணிவித்தானே (ஆதத்தெல்லா)

***

இந்தப் பாடலைப் பாடும் திருமதி அருணா சாய்ராம்:

http://www.youtube.com/watch?v=0gFu8hdVQeA

தாசரைப் பற்றிய திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பாடிய திரு பாலமுரளிகிருஷ்ணா:

http://www.youtube.com/watch?v=pumAat4mk98

***

Wednesday, March 19, 2014

அழைத்தால் உடனே வருபவன் யார்?



அ. கஜேந்திரன் என்னும் யானை ஆபத்துக் காலத்தில் ‘ரங்கா’ என்று அழைத்ததும் வந்து காப்பாற்றியவர்
ஆ. தன்னால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்றபோது இரு கைகளையும் தூக்கி ‘கிருஷ்ணா, என்னைக் காப்பாற்று’ என்று தொழுத திரௌபதியை காப்பாற்றியவர்
இ. இங்கே கண்டிப்பாக இறைவன் இருப்பான் என்ற பிரகலாதன் நம்பிக்கையை காப்பாற்ற தூணில் வந்து நின்றவர்.
ஈ. தன் பக்தர்களை எப்பொழுதும் கைவிடாதவர்

என்றெல்லாம் இறைவனை, அந்த ஸ்ரீமன் நாராயணனின் புகழை பல்வேறு பாடல்களில் புரந்தரதாசர் பாடியிருக்கிறார்.

அதேபோல் இன்றைய பாடலிலும் கூப்பிட்ட குரலுக்கு வருபவன் யார், அந்த ரங்கனா? அல்லது கிருஷ்ணனா? என்று பாடி, இறுதியில் அந்த புரந்தரவிட்டலன் யார் அழைத்தாலும் வருவான் என்ற பொருள் படுமாறு பாடலை முடிக்கிறார். வழக்கம்போல் எளிமையான, மொழிபெயர்க்கவே தேவையில்லாத இந்த பாடலை பார்த்துவிட்டு, வித்யாபூஷணர் குரலிலும் கேட்டுவிடலாம்.

***

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன
யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

ரங்கனை, கிருஷ்ணனை யார் அழைத்தார்கள்?
(அழைத்தால் உடனே வந்துவிடுவானே என்று பொருள்)

கோபால கிருஷ்னன பாப விநாசன
ஈபரி இந்தலி கரெய பந்தவனு (யாரே)

கோபால கிருஷ்னனை பாவங்களை போக்குபவனை
இந்த கணத்தில் அழைத்த மாத்திரத்தில் வருபவன் யார்? (யாரே)

வேணு விநோதன ப்ராண ப்ரியன
ஜானெயரரசன கரெய பந்தவனு (யாரே)

புல்லாங்குழல் ஊதுபவனை என் உயிரிலும் மேலானவனை
நல்லனவற்றை ஏற்றுக்கொள்பனை யார் அழைத்தது? (யாரே)

கரிராஜ வரதன பரம புருஷன
புரந்தர விட்டலன கரெய பந்தவனு (யாரே)

கஜேந்திரனை (யானை) காப்பாற்றியவன் அனைவரிலும் சிறந்தவனை
புரந்தர விட்டலனை கூப்பிட்டால் உடனே வருவானே (யாரே)

***

இந்தப் பாடலை அழகாகப் பாடும் வித்யாபூஷணர்:

https://www.youtube.com/watch?v=43An2WlsRjA

***

Saturday, March 15, 2014

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும்?


கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் (தாத்தா) என்று போற்றப்படும் புரந்தரதாசர், இந்த சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய முறை, துவக்கத்தில் பாடப்பட வேண்டிய பாடல்கள், மாயாமாளவகொளை ராகம் என பலவற்றை உருவாக்கியவர். தனது அனைத்துப் பாடல்களிலும் ‘புரந்தர விட்டல’ என்னும் தன் முத்திரையைப் பதித்து, அவை அனைத்தையும் அந்த புரந்தரவிட்டலனுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தவர். இறைவனின் பல அவதாரங்கள், வேத உபநிஷத்துகள், த்வைத சித்தாந்தத்தின் சாரங்கள் என அனைத்தைப் பற்றியும் பாடியுள்ள தாசர், மக்களுக்கு அறிவுரை வழங்கியும் பாடல்களைப் புனைந்துள்ளார். ஒரு ராகம் எப்படிப் பாடப்பட வேண்டும், வர்ண மெட்டுக்கள் என்றால் என்ன என்று இன்றளவும் பாடகர்கள் பயன்படுத்தும் விஷயங்களைக் குறித்து விதிகளை வகுத்தவர் தாசரே.

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியதுடன், ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்ற லட்சணங்களைக் குறித்தும் ஒரு பாடல் பாடியுள்ளார். நல்ல தாளத்துடன், பின்னணி இசையுடன் இருக்க வேண்டுமாம். பாடலைப் பாடுபவர் அந்தப் பாடலின் மொழி, பொருள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, உணர்ந்து பாட வேண்டும் என்றும் சொல்கிறார். அந்தப் பாடலை கேட்பவர் மனம் ஆனந்தப்படுமாறு இருக்க வேண்டும் என்று சொல்லி இறுதியில் தன் முத்திரையுடன் பாடலை முடிக்கிறார்.

***

தாள பேகு பக்க மேள பேகு
சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

தாளம் இருக்க வேண்டும்; பக்க வாத்தியங்களும் இருக்க வேண்டும்
அமைதியான நேரம்/காலம் இருக்க வேண்டும்; பாடலை கேட்க விரும்புபவர்களுக்கு (தாளம்)

கள சுத்த இரபேகு திளிது பேளலு பேகு
களவள பிடபேகு களெமுக இரபேகு (தாள)

(பாடுபவர்) குரல் சுத்தமாக இருக்க வேண்டும்;
(பாடும் வரிகளை) தெரிந்து புரிந்து உச்சரிக்க வேண்டும்
(பாடுபவர், அவரது) மனதில் குழப்பங்களை விடவேண்டும்
(பாடுபவர் முகம்) நல்ல களையுடன் இருக்க வேண்டும் (தாள)

ஜதிப்ராச இரபேகு கதிகே நில்லச பேகு
ரதிபதிபிதனோளு அதி ப்ரேம இரபேகு (தாள)

எதுகை/மோனை இருக்க வேண்டும்;
(தக்க இடத்தில்) நிறுத்திப் பாட வேண்டும்;
ரதியின் கணவனான மன்மதனின் தந்தையான ஸ்ரீமன் நாராயணனிடத்தே பக்தி இருக்க வேண்டும் (தாள)

அரிதவரு இரபேகு ஹருஷ ஹெச்சலி பேகு
புரந்தரவிட்டலனல்லி த்ருட சித்த இரபேகு (தாள)

(என்ன பாடுகிறோம் என்று) தெரிந்தவராக இருக்க வேண்டும்;
(பாடலை) கேட்பவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும்
புரந்தரவிட்டலனிடம் திடமான பக்தி இருக்க வேண்டும் (தாள)

***

இந்தப் பாடலை பாடியுள்ள Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள்:

http://www.youtube.com/watch?v=0HHvYcFk8H8

***

Tuesday, March 11, 2014

எதை செய்யணுமோ அதை செய்யாமல்...!!


நம்மை பெற்ற தாய், தந்தை; மனைவி, மக்கள், சொந்தபந்தம் இவர்களை எல்லாம் கஷ்டப்படுத்திவிட்டு, காயப்படுத்திவிட்டு, தேவைப்படும்போது அவர்களுக்கு உதவி செய்யாமல், தானங்கள், ஜப தப ஹோமங்கள் செய்வதால் எந்தவித பலனும் கிடையாது. முதலில் இதையெல்லாம் சரியாகச் செய்துவிட்டு பிறகு மற்ற காரியங்களைச் செய் என்று கூறும் தாசர், கூடவே மறக்காமல் புரந்தரவிட்டலனையும் நினைக்கவேண்டும்; இல்லையேல் இந்த ஜென்மம் எடுத்து எந்த பலனும் இல்லை என்றும் கூறி முடிக்கிறார்.

***

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி
நித்ய தானவ மாடி பலவேனு
சத்ய சதாசார இல்லதவனு ஜப
ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

பெற்ற தாய் தந்தையின் மனதை நோகவிட்டு
தினமும் தானங்கள் செய்து என்ன பலன்?
உண்மை பேசாமலும், நல்ல பழக்கங்களும் இல்லாதவன்
பத்தாயிரம் ஜபங்கள் செய்து என்ன பலன்?

தன்ன சதிசுதரு பந்துகள நோயிசி
சின்ன தானவ மாடி பலவேனு
பின்னானந்ததலி தேசதேசவ திருகி
அன்ன தானவ மாடி பலவேனு (ஹெட்ட)

தன் மனைவி மக்கள் உறவினர்களை நோகவிட்டு
செல்வத்தை தானம் செய்வதில் என்ன பலன்?
பகட்டுக்காக ஊர் ஊராகப் போய்
அன்னதானங்கள் செய்வதில் என்ன பலன்? (ஹெட்ட)

ஸ்னானக்கே பானக்கே ஆகுவ திளி நீரு
கானனதொளகித்து பலவேனு
ஆனந்த மூர்த்தி புரந்தர விட்டலன
நெயெனாத தனுவித்து பலவேனு (ஹெட்ட)

குளிக்கவும் குடிக்கவும் முடியாத சுத்தமான நீரானது
(யாரும் புகமுடியாத) காட்டுக்குள் இருந்து என்ன பலன்?
நமக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரும் புரந்தரவிட்டலனை
நினைக்காத இந்த உடம்பு இருந்து என்ன பலன்? (ஹெட்ட)

***

முதல் & இறுதி பத்திகள் மட்டும் பாடும் வித்யாபூஷணர்.




***


Thursday, March 6, 2014

பயப்படாதீங்க.. பயப்படாதீங்க...



த்வைத மார்க்கத்தில் ஸ்ரீ மத்வாச்சாரியர் முந்தைய அவதாரங்களில் ஹனுமன் மற்றும் பீமனாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஹனும, பீம, மத்வ என்ற இந்த வரிசையை புரந்தரதாசர் மற்றும் பிற தாசர்கள் தங்கள் பாடல்களில் பாடியிருக்கின்றனர். இன்றைய பாடலிலும் இம்மூவரையும் நம்பியவருக்கு இவ்வுலகில் எதைப்பற்றிய பயமும் தேவையில்லை என்கிறார் தாசர். மிகவும் எளிமையான, சிறிய பாட்டு. தாசர் பாடல் போட்டிகளில் யாராவது சிறுவர்கள் கண்டிப்பாக பாடும் பாட்டு ஆகும்.

***

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே
பயவு இன்யாதகய்யா
சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு
பயமும் எதுக்கய்யா
ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

கனசல்லி மனசல்லி களவளவாதரெ
ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)
ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித
பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த
பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ
குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை புஜை செய்யும்
குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

***

http://www.youtube.com/watch?v=5SFeaJgfTow

***

Saturday, March 1, 2014

அறிவுரை: கருமியாக இருக்காதீர்கள்...


தங்கள் செல்வத்தை தானும் அனுபவிக்காமல், வேண்டியவர்களுக்கும் கொடுக்காமல் கருமியாக இருப்பவர்களைப் பார்த்து தாசர் பாடும் பாடல் இது. பணத்தை வீட்டினுள் பதுக்கிவிட்டு, சரியாக வயிறார சாப்பிடவும் செய்யாமல், கருமியாக இருப்பவர்களே, உதவி வேண்டும் உறவினர்களுக்கு எதுவும் செய்யாமல் சாக்கு சொல்லி அனுப்பிவிடுகிறீர்களே, எமன் வந்து கூப்பிடும்போது, இது எதுவும் கூட வராது - அப்போது உங்களுக்கு இருக்கும் ஒரே உறவினன் நம் புரந்தரவிட்டலன்தான் என்று சொல்கிறார்.

***

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா
ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

ஹரி (உனக்கு) அதிகமாக கொடுத்தபோது (அதை) பயன்படுத்தவில்லை
ஹரி கொடுக்காத சமயங்களில் (இன்னும் அதிகம் வேண்டுமென்று) கேட்க மறக்கவில்லையே மனிதனே (ஹரி)

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி ஹோளிட்டு
மத்தே உப்பில்லதே உண்டேயல்லோ ப்ராணி
ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி போபாகா
ம்ருத்திகே பாயல்லி பித்தல்லோ ப்ராணி (ஹரி)

பத்தாயிரம் தங்கக் காசுகளை உள்ளே பத்திரமாக இட்டுவிட்டு
(கருமியாக) உப்பில்லாமல் உண்டாயே மனிதனே
(அந்த) பத்தாயிரம் தங்கக் காசுகள் காணாமல் போய்விட்டால்
உயிரையே விட்டுவிடுகிறாயே மனிதனே (ஹரி)

ஹுக்கியு துப்பவு மனெயொளகிரலிக்கே
குக்குரி அன்னவ திந்தெயல்லோ ப்ராணி
ஹெக்களத பாக்ய களிகெயலி போபாக
புக்கெய ஹொய்கொண்டு ஹோதேயல்லோ ப்ராணி (ஹரி)

நெய்யும், அரிசியும் வீட்டில் நிறைய இருந்தாலும்
(கருமியாக) கடலை கலந்த அன்னத்தை தின்கிறாயே மனிதனே
நிறைந்த செல்வம் ஒரு நாழிகையில் போய்க்கொண்டிருக்கும்போது
நீ காணாமல் போன ஒரு காசை தேடிப் போகிறாயே மனிதனே (ஹரி)

நெண்டரிஷ்டரு பந்து மனெ முந்தே குளிதிதரு
குண்ட சுத்தி நீனாடித்யல்லோ ப்ராணி
கண்டக யமனவரு குண்டிசுத எளெவாக
நெண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனு ப்ராணி

உறவினர்கள் உன் வீட்டுமுன் (உதவிகள் வேண்டி) காத்திருந்தபோது
சாக்குகள் சொல்லி அவர்களை தவிர்த்தாயே மனிதனே
யமதூதர்கள் உன்னை கயிற்றில் கட்டி இழுக்கும்போது
உன் உறவினர் (ஒரே ஒருவன்தான், அவனே) ஸ்ரீ புரந்தரவிட்டலன் (ஹரி)

***

பாடலை அனுபவித்து பாடியுள்ள வித்யாபூஷணர்:

http://www.youtube.com/watch?v=1VSuctLiyQc

***

Thursday, February 13, 2014

சொல்வன்மை அல்லது நாக்கை அடக்குதல்



ஐம்புலன்களை அடக்குதல் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றை கட்டுப்படுத்தி, வென்றிட வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும் என்று பல சான்றோர்கள் கூறியுள்ளனர். தாசரும் இந்தப் பாடலில் ஐம்புலன்களில் ஒன்றான நாக்கை கட்டுப்படுத்தி எப்பொழுதும் அந்த நாராயணனின் பெயரையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்.

அடுத்தவரை திட்டக்கூடாது, கோள் சொல்லக்கூடாது, காலையில் எழுந்தவுடன் ஸ்ரீராமனின் பெயரைச் சொல்ல வேண்டும் என்று வரிசையாக தாசர் நாக்கிற்கு புத்திமதி சொல்வதைக் கேட்டு ரசிக்கவும்.

***

ஆச்சாரவில்லத நாலிகே 
நின்ன நீச புத்திய பிடு நாலிகே
விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே
சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

நல்ல பழக்கங்கள் இல்லாத நாக்கே
உன் கெட்ட புத்தியை விட்டுவிடு நாக்கே
(எந்தக்) காரணமுமே இல்லாமல் அடுத்தவரை திட்டுவதற்காக
வெளியில் வருகிறாயே நாக்கே

ப்ராத: காலதொள் எத்து நாலிகே
ஸ்ரீ பதி எனபாரதே நாலிகே
பதித பாவனா நம்ம ரதிபதி ஜனகன
சததவு நுடி கண்ட்யா நாலிகே (ஆச்சார)

காலையில் எழுந்து, நாக்கே
ஸ்ரீபதி என்று சொல்லக்கூடாதா, நாக்கே
அனைத்து பாவங்களையும் போக்குபவனான நம் மன்மதனின் தந்தை (ஸ்ரீமன் நாராயணன் பெயரை)
எப்பொழுதும் சொல்ல வேண்டும் கேட்டாயோ, நாக்கே (ஆச்சார)

சாடி ஹேளலு பேடா நாலிகே
நின்ன பேடிகொம்பேனு நாலிகே
ரூடிகொடெயா ஸ்ரீரமணன நாமவ
பாடுதலிரு கண்ட்யா நாலிகே (ஆச்சார)

கோள் மூட்டாமல் இரு நாக்கே
உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாக்கே
இந்த உலகத்தின் நாயகன் ஸ்ரீரமணனின் நாமத்தை
பாடிக்கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

ஹரிய ஸ்மரணே மாடு நாலிகே
நர ஹரிய பஜிசு கண்ட்யா நாலிகே
வரத புரந்தர விட்டலராயன
சரண கமலவ நெனெ நாலிகே (ஆச்சார)

அந்த ஹரியின் நினைவாகவே இரு நாக்கே
நாராயணனை எப்பொழுதும் பஜித்துக் கொண்டேயிரு நாக்கே
வரங்களை அருளும் புரந்தர விட்டலனின்
பாதகமலங்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

***

எஸ்.ஜானகி அவர்கள் பாடியது : (ஒரு திரைப்படத்தில் வந்த வெர்ஷன்):

http://www.youtube.com/watch?v=Qx84mzkYMuM

வித்யாபூஷணர் பாடியது:
(இதைக் கேட்பதற்கு RealPlayer தேவைப்படும்).

http://www.kannadaaudio.com/Songs/Devotional/home/HaridasaNamana.php

***

Monday, February 10, 2014

கோவிந்தன் - எவ்வளவு அழகான பெயர்!



கோவிந்தன் - கோ (Go) என்ற சொல்லுக்கு புவி, பசு, பேச்சு & வேதம் என்று பல அர்த்தங்கள் உள்ளன. இந்த உலகத்தையும், அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுபவன்; கோகுலத்தில் இருந்த பசுக்களை காப்பாற்றியவன்; அவனில்லாது யாருடைய தொண்டையிலிருந்தும் பேச்சு வரவே வராது; அனைத்து வேதங்களும் யாரைக் குறித்து எழுதப்பட்டனவோ, அவன் ; - இதெல்லாம் யாருன்னு கேட்டால் - கோவிந்தன், அந்தப் பெயரை சொல்லச் சொல்ல ஆனந்தம்.

இதையே குறிப்பிட்டு பாடப்பட்டுள்ள இந்தப் பாடல், மிகவும் சிறியது; ஆனால் கோவிந்தா என்ற பெயரைப் போல் மிகவும் அழகான பாடல்; மிகவும் புகழ் பெற்றதும் ஆகும்.

***

கோவிந்தா நின்ன நாமவே சந்தா
கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு
கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு (கோவிந்தா)

அனுரெணு த்ருண கஷ்ட பரிபூர்ண கோவிந்தா
நிர்மலாத் மனாகி இருவதே ஆனந்தா (கோவிந்தா)

அணுவைப் போல சின்னஞ்சிறிய கஷ்டங்களை போக்குபவனே கோவிந்தா
மனது சுத்தமாக இருப்பதே ஆனந்தம் (கோவிந்தா)

ஸ்ரிஷ்டி ஸ்திதி லய காரண கோவிந்தா
பரி மஹிமெய திளியுவுதே ஆனந்தா
பரம புருஷ ஸ்ரீ புரந்தர விட்டலன
ஹிங்கதே தாசர சலஹுவுதே ஆனந்தா (கோவிந்தா)

ஆக்குதல் காத்தல் அழித்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமானவனே கோவிந்தா
(உன்) அளவில்லாத மகிமையை தெரிந்து கொள்வதே ஆனந்தம்
பரமபுருஷன் ஆன ஸ்ரீ புரந்தரவிட்டலனை
(எப்பொழுதும் பாடித் திரியும்) தாசர்களுடன் பேசிப் பழகுவதே ஆனந்தம் (கோவிந்தா)

***

திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் குரலில் இந்தப் பாடல்:
http://www.youtube.com/watch?v=wUTJoX_AS8E

உன்னிகிருஷ்ணன் பாடியது:
http://www.youtube.com/watch?v=kDvYP6zgS-U

***

Wednesday, February 5, 2014

நீ நிஜமாகவே கருணையுள்ளவன்தானா?


பற்பல பாடல்களில் சொல்லப்பட்ட அதே கருத்துகள்தான். சர்வோத்தமனிடம் தாசர் என்ன வேண்டுவார்? இம்மையில் எப்பொழுதும் நின் கருணை; மறுமை வேண்டாம். இவ்வளவுதான். இதை ‘வைராக்கிய’ வகைப் பாடல் என்பார்கள். இந்த வகையில் புரந்தரதாசர், கனகதாசர் முதலானோர் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இதில் பரந்தாமனை திட்டிப் பாடுவது இன்னொரு வகை. அதை ‘நிந்தா ஸ்துதி’ என்பர். இந்த பாடல் இவ்விரு வகையிலும் வருமாறு உள்ளது.

முன்னர் இறைவன் பல அவதாரங்களில் தன் பக்தர்களை எப்படி காப்பாற்றினான், என்னை ஏன் இந்தப் பிறவியில் இன்னும் விட்டிருக்கிறாய்? நீ கருணையுள்ளவன்தானா என்று எனக்கு நம்பிக்கை போய்விடும் போலிருக்கிறதே என்றெல்லாம் புரந்தரதாசர் பாடியிருக்கும் இந்த அற்புதமான பாடலை பார்ப்போம்.

***

கருணாகர நீனெம்புவது யாதகோ
பரவச வில்ல எனகே
பரி பரியலி நர ஜெம்னவனித்து
திருகி திருகி மன கரகிசுவத கண்டு (கருணாகர)

கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?
(நீ கருணாகரன் என்ற) நம்பிக்கையில்லை எனக்கு
மறுபடி மறுபடி எனக்கு மானிட ஜென்மத்தைத் தந்து
திரும்பத் திரும்ப என் மனம் கஷ்டப்படுவதைக் காணும் உன்னை (கருணாகர)

கரி த்ருவ பலி பாஞ்சாலி அஹல்யெயா
பொரெதெவா நீனந்தே
அரிது விசாரிசி நோடல தெல்லவு
பரி பரி கந்தேகளெந்தே (கருணாகர)

யானை (கஜேந்திரன்), துருவன், பலி மகாராஜா, பாஞ்சாலி, அகல்யை
(ஆகிய எல்லாரையும்) காப்பாற்றியவன் நீயே என்கிறார்கள்
தானாகவும், கேட்டு தெரிந்துகொண்ட இது (மேற்கண்ட) எல்லாமும்
மறுபடி மறுபடி (கற்பனைக்) கதைகளாகவே தோன்றுகிறதே? (கருணாகர)

கருணாகர நீனாதரே ஈகலே
கரபிடிதென்னனு ஹரி காயோ
சரசிஜாக்‌ஷனே அரச நீனாதரே
துரிதகளென்னனு பீடிபதுண்டே? (கருணாகர)

நீ கருணையுள்ளனவன் என்றால் இப்போதே
என் கைகளைப் பிடித்து என்னை காப்பாயாக ஹரியே
தாமரைக் கண்ணனே, நீ (அனைவருக்கும்) அரசன் என்றால்
கஷ்டங்கள் என்னை பீடிப்பது ஏன்? (கருணாகர)

மரண காலதல்லி அஜாமிள கொலிதே
கருடத்வஜனெம்ப நாமதிந்தா
வரபிருதுகளு உளிய பேகாதரே
த்வரிததி காயோ, புரந்தர விட்டலா (கருணாகர)

மரணத் தருவாயில் (இருந்த) அஜாமிளனுக்கு கருணை காட்டினாய்
கருடத்வஜன் (வாகனம்) என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
(உனக்கு இருக்கும்) நல்ல பெயர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால்
உடனடியாக என்னைக் காப்பாற்றுவாய், புரந்தர விட்டலனே (கருணாகர)

***

பீமண்ணர் பாடிய இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=uwF3g_A2EJ4

வித்யாபூஷணர் பாடியதை இங்கே கேட்கலாம்.

Monday, February 3, 2014

ஸ்ரீமஹாலக்‌ஷ்மி யாரை திருமணம் செய்து கொள்வார்?


பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். பாற்கடலை கடைய கடைய, அதிலிருந்து முதலாவதாக வந்தவர் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி. இவர் ஸ்ரீமன் நாராயணனுக்கே உரியவர் ஆகையால், உடனே அவரிடம் போய்த் தஞ்சமானார்.

இந்த இடத்தில், ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி தோன்றியவுடன், புரந்தர தாசர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்பது போல் இந்தப் பாடல் உள்ளது. அதாவது, நீ யாரைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்? என தாசர் கேட்பதாக உள்ளது. பல தலங்களில் இருக்கும் பரந்தாமனை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடலை பார்ப்போம்.

***

க்‌ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி
யாரிகே வதுவாகுவே - நீனு யாரிகே வதுவாகுவே

பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி
யாரை திருமணம் செய்துகொள்வாய் - நீயே..

சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ
பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ
சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ
உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)

(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா
பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா
நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா
காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)

செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ
கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ
இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ
நலினாக்‌ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)

அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா
உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா
அல்லது பாண்டுரங்க விட்டலனையா
தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)

மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ
சுலப தேவரு புருஷோத்தமனிகோ
பலதாயக நித்ய மங்கள தாயககோ
செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)

மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா
யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா
வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா
வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)

வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ
ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ
சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ
சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)

இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா
அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா
நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா
ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)

சரணாகத ரக்‌ஷக சாரங்கபாணிகோ
வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ
குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ
ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)

சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா
வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா
’குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா
நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)

***

திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய இந்த பாடலின் ஒலித்துண்டை கீழ்க்கண்ட தளத்தில் ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழவும்.


Saturday, February 1, 2014

எமன் எங்கேயிருக்காரு?


பெரும்பாலும் புரந்தரதாசரின் பாடல்களுக்கு மொழிபெயர்ப்பே தேவையில்லை. சிறிது கன்னடம் தெரிந்திருந்தாலே புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். இன்றைய பாடலும் அப்படிதான். ராமன் & கிருஷ்ணன் - இவர்களை நம்பியவர்களுக்கு எப்படி உதவி கிடைத்தது? இவர்களை நம்பாதவர்கள் / சாராதவர்கள் என்ன ஆனார்கள்? இவற்றை விளக்கும் பாடலே இது.

சொந்த சகோதரனை விட்டு ராமனிடம் சரணாகதி பெற்ற விபீஷணன்; உனது படைகள் வேண்டாம், நீ மட்டும் என்னுடன் இருந்தாலே போதும் என்ற அர்ஜுனன்; கண்டிப்பாக இந்த தூணில் நாராயணன் இருப்பான் என்று நம்பிக்கையில் சொன்ன பிரகலாதன்; கிருஷ்ணனை நம்பிய உக்ரசேனர் - இவர்களை எப்படி இறைவன் ஆட்கொண்டு காப்பாற்றினான் என்று இந்த பாடலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாறாக ராவணன், துரியோதனன், ஹிரண்யகசிபு, கம்சன் - இவர்களுக்கு என்ன ஆனது? - அந்த பகவானே எமன் ஆனான் என்று கூறுகிறார் தாசர்.



யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா
யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)

யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்
ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்

நம்பித விபீஷணகே ராமனாதா
நம்பதித்த ராவணகே யமனாதா (யமனெந்து)
நம்பித அர்ஜுனகே மித்ரனாதா
நம்பதித்த துர்யோதனகே சத்ருவாதா (யமனெந்து)

(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்
நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார் (யமனெந்து)
நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்
நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பித ப்ரஹ்லாதனிகே ஹரியாதா
நம்பதித்த ஹிரண்யக்கே குறியாதா (யமனெந்து)
நம்பித உக்ரசேனகே ப்ருத்யனாதா
நம்பதித்த கம்சக்கே சத்ருவாதா (யமனெந்து)

நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்
நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார் (யமனெந்து)
நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்
நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பிக்கொள்ளி பேக ஸ்ரீ கிருஷ்ண தேவனா
கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன (யமனெந்து)

ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்
சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள் (யமனெந்து)

***

சிக்கில் குருசரணின் இந்த குரலில் இந்த பாடல்:

http://www.youtube.com/watch?v=bWRdG4F4_qc

***

Thursday, January 30, 2014

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு!!



கற்கண்டை விட இனிமையானது எது? அந்த கிருஷ்ணனின் நாமம்தான். அதை சொல்லுவதால் நாக்கில், மனதில் எவ்வளவு இனிமை பரவுகிறது என்று சொல்கிறார் புரந்தர தாசர். 

இந்தப் பாடல் முழுக்க கற்கண்டையும், ஸ்ரீ கிருஷ்ணனின் பெயரையும் ஒப்பிட்டு, பின்னதின் இனிமையை அழகாக விவரிக்கிறார். 

கற்கண்டுன்னா எறும்பு வரும், நிறைய இருந்தா திருட்டு போயிடும், சந்தையில் வாங்கலாம், விற்கலாம், வண்டி கட்டி எடுத்துப் போயிடலாம் - ஆனால், கற்கண்டை விட மிகமிக இனிமையானதாக இருந்தாலும், ஸ்ரீகிருஷ்ணனின் நாமத்தை மேற்கண்ட எதாலும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். 

இன்று புரந்தர தாசரின் புண்ய தினம். அடுத்த சீசனை இந்த அருமையான பாட்டுடன் துவக்குவோம். புரந்தர விட்டலா.... வாங்க கற்கண்டு சாப்பிடலாம்...

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு
கல்லு சக்கரே கொள்ளீரோ
கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு
புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு - நீங்க எல்லோரும்
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு
கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)
மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா
ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா
எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா
உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா... (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது
எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது
எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது
உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா
எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா
கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா
பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது
(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது
கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது
பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்... (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா
சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா
சந்தத பக்தர நாலகே சவிகொம்ப
காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது
சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது
எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்
புரந்தர விட்டலா என்னும் நாமமான ... (கற்கண்டு)

***

இந்தப் பாடலை மிக அருமையாக உணர்ந்து பாடும் வித்யாபூஷணர்.

http://www.youtube.com/watch?v=NGzXqZcJzYk

***