Monday, March 11, 2013

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.



கேட்டதில் பிடித்தது:
ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக்கு நாராயணன், லட்சுமி நாராயணன், நரசிம்மன் என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். அதை அப்படியே கூப்பிட்டால், ராம நாமத்தைப் போல பலனைப் பெறலாம். ஆனால் கூப்பிடுவதோ, முறையே, நாணா, லச்சு, நர்ஸு என்று கூப்பிடுகிறார்கள். அதுவே ராமன் என்று பெயர் வைத்தால், அதை சுருக்கினாலும் ராம் என்றே ஆகும். ஆகவே, அனைத்து வகையிலும் ராம நாமம் சுலபமானது, சிறந்தது.

***

பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.

இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?

அதற்கு சிவபெருமான் சொன்னது:

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே

’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.

***

எந்தவொரு விஷயத்தையும் பெரியவர்கள் சொன்னால், ‘அவரே சொல்லிட்டார்’னு சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதைப் போல் தாசரும், ராம நாமத்தின் மகிமையை சொல்லும்போது, பரமசிவன் தன் மனதுக்கு இனியவளிடம் சொன்ன மந்திரம் என்று இதன் பெருமையை எடுத்துரைக்கிறார். நாம் சாதாரணமாக அது இது என்று பேசுவதைப் போல், அந்த மந்திரம், இந்த மந்திரம்னு எதையாவது சொல்லிக்கிட்டிருக்காமல், ‘இந்த’ மந்திரத்தை சொல்லுங்கள் என்கிறார். பாடலையும் அதன் பொருளையும் பாருங்கள். அவ்வப்போது ‘ராம ராம’ என்று சொல்லுங்கள்.

***

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா
ராம மந்த்ரவ ஜபிஸோ
ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா
சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே
அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்
அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர
சல பீதியொளு உச்சரிப மந்த்ர
ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர
சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்
சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்
எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்
சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர
சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர
துரித கானனகிது தாவானல மந்த்ர
பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்
அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்
பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்
உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு 
சானுராகதி நித்ய சேவிப மந்த்ர
பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர
தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)
காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்
சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்
(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

***


043/365
***


Thursday, March 7, 2013

பிள்ளையார்பட்டி ஹீரோ

விநாயகர். அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர். வெறும் மஞ்சளைப் பிடித்துக் கூப்பிட்டாலும் ஓடோடி வருவார் என இவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

தாரதம்யம். ஆங்கிலத்தில் Hierarchy. தமிழில் படிநிலை. த்வைதத்தில் கடவுள்கள் ஒரு படிநிலையில் அடுக்கப்பட்டுள்ளனர். (பார்க்க: விக்கி சுட்டி) நிலையின் மேல் ஸ்ரீவிஷ்ணு. அவருக்கு அடுத்து மகாலட்சுமி. பிறகு பிரம்மா. இப்படியான படியில் சற்று கீழே வருபவரே விநாயகர். ஆனாலும் இவர் மேல் புரந்தரதாசர் முதலான அனைத்து தாசர்களும் பற்பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

விநாயகர் முதல் இந்த படிநிலையில் உள்ள அனைத்து கடவுள்களுமே ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றனர் என்பதால், தாசர் இத்தகைய பாடல்களின் இறுதியில், புரந்தரவிட்டலனின் பக்தனே, தாசனே என்று விளித்துவிடுவார். இன்றைய பாடலிலும் இதை கவனிக்கவும்.

தாசர் பாடிய இன்னொரு பிள்ளையார் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சுட்டி: http://dasar-songs.blogspot.in/2012/01/blog-post.html

சரணு சித்தி விநாயகா - மிகவும் புகழ்பெற்ற பாடல்.

சரணு சித்தி விநாயகா சரணு வித்ய பிரதாயகா
சரணு பார்வதி தனைய மூர்த்தி சரணு மூஷிக வாகனா (சரணு)

மோட்சத்தை, கல்வியை கொடுப்பவனே விநாயகா, உன்னை வணங்குகிறேன்
பார்வதியின் மைந்தனே, மூஞ்சுறு வாகனனே, உன்னை வணங்குகிறேன் (சரணு)

நித்தில நேத்ரனே தேவி சுதனே நாகபூஷண பிரியனே
கடிகடாங்கத கோமளாங்கனே கர்ண குண்டல தாரணே (சரணு)

நெற்றியில் கண் இருப்பவரின் (சிவனின்) மனைவியின் புதல்வனே,
பாம்பை ஆபரணமாக அணியப் பிரியப்படுபவனே,
பெரிய பானையைப் போல் வயிறு உடையவனே,
குண்டலங்கள் அணிந்த காது உடையவனே (சரணு)

பட்ட முத்தின பதக ஹாரனே பாஹு ஹஸ்த சதுஸ்தனே
இட்ட தோடுகயா ஹேம கங்கண பாஷாங்குஷ தரனே
குக்ஷி மகா லம்போதரனே இக்ஷு சாப கேளிதனே
பக்ஷி வாகன ஸ்ரீ புரந்தர விட்டலன நிஜ தாசனே (சரணு)

வட்டமான முத்துமாலையை அணிபவனே,
நான்கு கரங்கள் உடையவனே,
தங்க வளையல்கள், ஆபரணங்கள் அணிந்தவனே,
கயிறு, அங்குச ஆயுதங்களை தரித்தவனே,

பெரிய வயிறு உடையவனே,
இக்‌ஷு சாபனை (என்னும் அரக்கனை) வென்றவனே
கருட வாகனான ஸ்ரீ புரந்தர விட்டலனின்
நிஜமான தாசனே (சரணு)

***

MLV அம்மா மிகவும் அருமையாக பாடுவதை பார்க்கலாம். காணொளியில் 50க்கும் மேற்பட்ட பிள்ளையார்களை கண்டு களிக்கலாம்.


***

மிக அழகாகவும் தெளிவாகவும் பாடும் ஒரு குழுவினர்.


***

042/365

Monday, March 4, 2013

இறைவனின் திருவடிக்காக எதையெல்லாம் இழக்க முடியும்?

கனகதாசர். இவரது வரலாற்றை ஏற்கனவே இந்த பதிவில் பார்த்துட்டோம். அதில் இருக்கும் கமெண்ட்ஸ்களையும் பார்த்துடுங்க. அருமையான தகவல்கள் அங்கு இருக்கின்றன.

கனகதாசருடைய பெரும்பாலான பாடல்களில் வைராக்கியம் நிரம்பியிருக்கும். அதாவது, மனைவி, மக்கள், ஊர், உலகம் அனைத்தையும் விட்டுடறேன் - எனக்கு நீதான் வேண்டும். உன் திருவடிகளே போதும். வேறு எதையும் நாம் விரும்ப மாட்டேன். எதுவுமே எனக்கு வேண்டாம். இப்படி.

இன்றைய பாடலும் அப்படியே. இறைவா, உன் திருவடிகளுக்காக, அவற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதற்காக, நான் எதையும் விடத் தயாராக இருக்கிறேன்னு அவர் சொல்ற பட்டியலைப் பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது. இவ்வளவையும் சொல்றவர் அடக்கத்துடன் ‘இவற்றை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. நிஜமாவே (அனுபவத்திலும்) சொல்றேன். உன்னை விட்டு என்னால் ஒரு நொடியும் இருக்கவே முடியாது என்று பாடுகிறார்.

இதில் (பட்டியலில்) இருக்கும் எதுவும் என்னால் முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீங்க பாத்துட்டு சொல்லுங்க.

***

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணவ
பரிதே மாதேகின்னு அரிது பேளுவேனய்யா (தொரெது)

உன் காலடியை விட்டு (யாராலும்) சந்தோஷமாய் வாழமுடியுமா (முடியாது)
தற்பெருமைக்காக சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன் ஐயா (தொரெது)

தாயி தந்தெயா பிட்டு தபவு மாடலு பஹுது
தாயாதி பந்துகள பிடலு பஹுது
ராய முனிதரே ராஜ்யவ பிடபஹுது
காயஜாபித நின்ன அடிய பிடலாகது (தொரெது)

தந்தை தாயை விட்டுப் போய் தவம் செய்யவும் முடியும்
தாயாதி (பங்காளிகள்) உறவினர்களை உதறவும் முடியும்
அரசன் (நம் மேல்) கோபப்பட்டால், ஊரை விட்டுப் போய்விடவும் முடியும்
என்னை இந்தப் பிறப்பை அளித்தவனே, உன் அடியை விடவே முடியாது (தொரெது)

ஒடலு ஹசிதரே அன்னவ பிடபஹுது
படெத க்‌ஷேத்ரவ பிட்டு ஹொரடலுபஹுது
மடதி மக்கள கடெகே தொளகிஸி பிடபஹுது
கடலொடெய நிம்மடியா களிகே பிடலாகது (தொரெது)

பசித்த வயிறாயினும் உணவை விட்டு (பட்டினியாக) இருக்க முடியும்
இருக்கும் இடத்தை விட்டு கிளம்பவும் முடியும்
மனைவி மக்களை (குடும்பத்தை) விட்டு போகவும் முடியும்
பாற்கடலில் இருப்பவரே, உன் அடியை ஒரு நொடியும் விடமுடியாது (தொரெது)

பிராணவா பரரிகே பேடிதரே கொடபஹுது
மானாபிமானவ தக்கிச பஹுது
ப்ராணதாயகனாத ஆதிகேசவராய
ஜான ஸ்ரீ கிருஷ்ணா நின்னடிய பிடலாகது (தொரெது)

யாராவது (என்) உயிரைக் கேட்டாலும் கொடுக்க முடியும்
(என்) கௌரவம் / சுயமரியாதையை குறைத்துக் கொள்ளவும் முடியும்
எனக்கு உயிரைக் கொடுத்த ஆதிகேசவனே
தலைசிறந்தவனே, கிருஷ்ணனே, உன் அடியை விடவேமுடியாது (தொரெது)

***
***



***

041/365

***

Thursday, February 28, 2013

ராம நாமம் என்னும் பாயசம்.


பாயசம். பால் பாயசம். இப்படி சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறும். அது சாதாரண மக்களாகிய நமக்கு.

புரந்தரதாசருக்கு?

வேதங்கள், புராண இதிகாசங்கள் அனைத்தையும் கற்றதோடு இல்லாமல், அவற்றின் சாரத்தை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிய கன்னடத்தில், பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்துக் கொடுப்பவராயிற்றே. அவருக்கு இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதாம்.

ராமா. கிருஷ்ணா. விட்டலா.

இந்தப் பெயர்களை அடிக்கடி சொன்னால், பால் பாயசத்தைக் குடித்தது போல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.

நாமும் சொல்லிப் பார்ப்போமா?

ராமா
கிருஷ்ணா
விட்டலா

இப்போ பாட்டு.

இந்தப் பாட்டில் பாயசம் செய்வதற்கான சமையல் குறிப்பைச் சொல்லி, அதே போல் இறைவனின் நாமங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகிறார் தாசர்.

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி
சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு
அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***சஜ்ஜிகே - கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.
ஷாவிகே - சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

மேலே கூறிய பாட்டின் பொருளில் பாயசத்திற்கான குறிப்புகளை நீக்கிவிட்டுப் படித்தால் தாசர் கூறவரும் பக்தியின் தத்துவம்; ராம நாமத்தின் மகிமை ஆகியவை புரியும்.

அதாவது இப்படி:

கவனத்துடனும், வைராக்யத்துடனும் செய்ய வேண்டியது என்னவென்றால்; இதயத்தில் (ராமா) என்கிற எண்ணத்தை விதைத்து; புத்தியால் அதன் மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, வரும் சந்தோஷத்தை / ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது? மறுபடி ராமா, ராமா என்கிற புரந்தர விட்டலனை நினைத்துதான்.

***

ப்ரியா சகோதரிகள் அருமையாக பாடும் ராம நாம பாயசக்கே...


***

040/365

Monday, February 25, 2013

வாராய், கிருஷ்ணா வாராய்...



கிருஷ்ணா நீ பேகனே பாரோ. இந்தப் பாடலை கண்டிப்பா அனைவரும் கேட்டிருப்பீங்க. ஏற்கனவே நம்ம தளத்தில் பாத்துட்டோம். குட்டி கிருஷ்ணனை, வேகமாய் வந்து உன் திருமுகத்தை காட்டு என்னும் அந்தப் பாடலை இயற்றியவர் ஸ்ரீ வியாசதீர்த்தர். (1460-1539). இவர் ஸ்ரீ புரந்தரதாசரின் குரு. புரந்தரதாசரின் காலம் (1484-1564). தன் குருவைப் போலவே இவரும் கிருஷ்ணனை வாராய் என்று அழைக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் இன்று பார்க்கப்போவது.

கிருஷ்ணன், மாடு மேய்க்கும்போது, புல்லாங்குழல் ஊதாத சமயங்களில் அங்கிருக்கும் நண்பர்களுடன் என்ன விளையாடுவார்? பந்து, பம்பரம் ஆகியவற்றை விளையாடுவதுடன், டாண்டியா நடனமாடியபடி பொழுதைக் கழிக்கிறாராம். இப்படி விளையாடும் சிறுவனை, சங்கு சக்கரம் ஏந்திய நாராயணனை, பல அவதாரங்கள் எடுத்த பகவானை - அவன் புகழை, அருமை பெருமைகளை உலகில் பரப்புவதே தன் வேலை/ கடமை என்று கூறி அழைக்கிறார் தாசர்.

இந்த பக்திபூர்வமான பாடலை பொருளுடன் பார்த்தபிறகு, பீமண்ணர் பாடியுள்ளதையும் கேட்போம்.

சினிகொளு = டாண்டியா குச்சிகள்
செண்டு = பந்து
புகிரி = பம்பரம்

இந்த சொற்களின் சரியான பொருளை அறியத் தந்த நண்பர் @seevin க்கு நன்றி.

***

யாதவ நீ பா யதுகுல நந்தன
மாதவ மதுசூதன பாரோ (யாதவ)

கிருஷ்ணா நீ வாராய், யதுகுலத்தின் பிறந்தவனே
மாதவா, மதுசூதனா, வாராய்.

சோதரமாவன மதுரெலி மடஹித
யசோதே கந்தா நீ பாரோ (யாதவ)

தாய்மாமனை (கம்சன்) மதுராவில் கொன்றவனே
யசோதை மைந்தனே நீ வாராய் (யாதவ)

கனகாலந்திகே குலுகுலு எனுதலி
ஜணஜண எனுதிக நாதகளு
சினிகொளு செண்டு பொகரெயனாடுதா
சன்னவரொடெகூடி நீ பாரோ (யாதவ)

கணுக்காலில் (கட்டிய) ஜல்ஜல் என்னும் சத்தமிடும் (கொலுசுடன்)
ஜண்ஜண் என்று அதிரும் (இனிமையான உன் புல்லாங்குழல்) இசையுடன்
டாண்டியா, பந்து, பம்பரத்துடன் நீ ஆடிக்கொண்டு
உன் நண்பர்களுடனே நீ வாராய் (யாதவ)

சங்கசக்ரவு கையலி ஹொளெயுத
பிங்கத கோவள நீ பாரோ
அகளங்க மஹிமனே ஆதி நாராயணா
பேகெம்ப பகுதரிகொலி பாரோ (யாதவ)

ஜொலிக்கும் சங்கு சக்கரத்தை கையில் பிடித்து
எப்போதும் வெற்றி பெறுபவனே, இடையனே நீ வாராய்
குறைகளேயில்லாத மஹாத்மனே ஆதி நாராயணனே
உன்னை வேண்டும் பக்தர்களை காப்பாற்றுபவனே, வாராய் (யாதவ)

ககவாஹனனே பகெ பகெ ரூபனே
நகேமுக தர்சனனே நீ பாரோ
ஜகதொளு நின்னய மஹிமெயா பொகளுவே
புரந்தர விட்டலா நீ பாரோ (யாதவ)

கருட வாஹனனே, பல அவதாரங்களை எடுத்தவனே
சிரித்த முகத்தையுடையவனே நீ வாராய்
உலகத்தில் உன் மகிமையை பாடி பரப்புவேன்
புரந்தரவிட்டலா நீ வாராய் (யாதவ)

***



***

039/365

Thursday, February 21, 2013

எப்போதும் ஹரியை நினை மனமே!



அஜாமிளன். துவக்கத்தில் ஒரு நல்ல பக்தனாக இருந்து தினசரி பூஜைகளெல்லாம் செய்து வந்தவர். நடுவில் மதி மயங்கி, அனைத்தையும் மறந்து வேறொரு பெண்ணின் பின்னால் திரிந்து வாழ்ந்தார். தன் இறுதிக் காலத்தில் அவரை அழைத்துப் போக எமதூதர்கள் வந்து நின்றிருந்தபோது, கடைசி மகனை ‘நாராயணா’ என அழைத்த நேரத்தில் உயிர் பிரிந்ததால், நாராயணனின் தூதர்கள் வந்து அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துப் போனார்கள் என்று சொல்வார்கள்.

அப்படின்னா, நாம ஏன் வாழ்நாள் முழுக்க நாராயணனை நினைக்கணும்? அவன் பெயரை சொல்லணும்? அஜாமிளன் மாதிரி கடைசி காலத்தில் மட்டும் சொன்னால் போதுமேன்றவங்களுக்கு தாசர் ஒரு தனி பாடலில் - தம்பி, அப்படி முடியாது. அந்த நேரத்தில் உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்கிறார். அந்த பாட்டு வேறொரு நாளில். இன்றைய பாட்டு வேறே.

இன்னிக்கு தாசர் சொல்றது - எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டேயிரு; அதுவே மோட்சத்திற்காக சுலபமான வழி என்கிறார். அதற்கு அவர் சொல்கிற உதாரணங்கள்,  நாம அடிக்கடி, எல்லா பாடல்களிலேயும் பார்க்கிற உதாரணங்கள்தான். கஜேந்திரன், திரௌபதி, மேலே பார்த்த அஜாமிளன் இப்படி. ’ஹரி ஸ்மரணே மாடோ’ என்ற இந்தப் பாட்டு மிகவும் புகழ்பெற்றது. யூட்யூபில் தேடினால் பற்பல பாடகர்கள் பாடியுள்ளதாக காணொளிகளை காணலாம்.

ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர
பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டே இரு
மோட்சத்திற்கு இதுதான் கண்டிப்பான வழி பாரு (ஹரி)

துரித கஜக்கே கண்டீரவ எனிசித
சரணாகத ரக்‌ஷக பாவன நீ (ஹரி)

கஷ்டத்தில் இருந்து பிளிறிய கஜேந்திரனுக்கு விரைவாக
சரணாகதி கொடுத்து ரட்சித்தவனை நீ (ஹரி)

ஸ்மரணேகைத ப்ரஹ்லாதன ரக்‌ஷிஸித 
துருள ஹிரண்யகன கரவ சீளித
தருணி த்ரௌபதி மொரெயிடதாக்‌ஷண
பரதிந்தாக்‌ஷயவிட்ட மஹாத்மன (ஹரி)

எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருந்த பிரகலாதனை ரட்சித்து
ஹிரண்யகசிபுவின் கையை முறித்து
(காப்பாற்று என்று) த்ரௌபதி முறையிட்ட அதே நொடியில்
முடிவில்லாத ஆடையை வழங்கிட்ட மகாத்மாவான (ஹரி)

அந்து அஜாமிள கந்தன கரெயலு
பந்து சலஹி ஆனந்தவ தோரித
ஸ்ரீஷ புரந்தர விட்டல ராயன
சிருஷ்டிகொடேயன முக்தி பஜிஸி நீ (ஹரி)

அன்று அஜாமிளன் தனது மகனை கூப்பிட்டபோது
உடனே வந்து அவனுக்கு ஆனந்தத்தை காட்டிய
ஸ்ரீபதியான புரந்தர விட்டலனிடம்;
பிறப்பை தருபவனிடம், முக்தியை வேண்டி பாடல்களைப் பாடி நீ (ஹரி)

***

இந்தப் பாடலை மிகவும் பக்தியுடன் அழகாகப் பாடியிருக்கும் திரு.வித்யாபூஷணர்.


நடுவில் ஒரு பத்தியை விட்டுப் பாடியிருக்கும் எம்.எல்.வி. அம்மா.

***
038/365


Monday, February 18, 2013

எழுந்தருள் எழுந்தருள் கோவிந்தா!



திருப்பதியில் தினமும் அந்த ஏழுமலையானை எழுப்பும் எம்.எஸ்.அம்மா பாடும் சுப்ரபாதம் ஆகட்டும், அதையே தமிழில் மொழிபெயர்த்து வந்திருக்கும் திருப்பள்ளியெழுச்சி ஆகட்டும், கேட்கும்போதே எவ்வளவு இனிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது. நாராயணனின் அவதாரங்கள், லீலைகள், பெருமைகள் என அனைத்தையும் பாடியுள்ள தாசர்கள், அந்தக் கண்ணனை தாலாட்டு பாடி தூங்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், தூங்கும் இறைவனை எழுப்பும் சுப்ரபாத பாடல்களையும் பாடியுள்ளனர்.

ஒரு வருடம் கழித்து மறுபடி பதிவுகளைத் துவக்கும் இந்த நாளில், இறைவனை எழுப்பி, நம்மை பார்த்து அருளுமாறு கேட்போம். யுத்தத்திற்கு உதவி செய்ய அழைக்க வந்த அர்ஜுனன், தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனின் காலடியில் அமர்ந்து, அவனுடைய முதல் பார்வை தன் மேல் பட்டதாலேயே, தான் வேண்டிய வரத்தைப் பெற்றான் என்பது போல், நாமும் அவன் காலடியில் அமர்ந்து, இந்த சுப்ரபாதத்தைப் பாடி, அவன் கருணைப் பார்வை நம் மேல் படுமாறு வேண்டுவோம்.

இனி கனகதாசர்.

ஏளு நாராயணனே ஏளு லட்சுமி ரமணா
ஏளு ஸ்ரீ கிரியொடெயா, வேங்கடேசா

எழுந்தருள் நாராயணனே, எழுந்தருள் லட்சுமி ரமணனே
எழுந்தருள் மலைவாசனே, வேங்கடேசனே

காசித ஹாலன்னு காவடியொளு ஹெப்பிட்டு
லேசாகி கடெது ஹொசபெண்ணெ கொடுவே
சேஷ சயனனே ஏளு சமுத்ர மதனவ மாடு
தேச கெம்பாயித்து ஏளய்யா ஹரியே (ஏளு)

காய்ச்சிய பாலை பாத்திரத்தில் நிரப்பி
மெதுவாக கடந்து புதிதாக திரட்டிய வெண்ணையை கொடுப்பேன்
நாகத்தில் படுத்திருப்பவனே எழுந்திரு, பாற்கடலை கடைய வா
வானம் சிவந்துவிட்டது, எழுந்திருப்பாயாக (ஏளு)

அரளு மல்லிகே ஜாஜி பரிமளத புஷ்பகள
சுரரு தந்தித்தாரே பலு பகுதியிந்தா
அரவிந்தனாபா சிரி விதி பவாதிகளொடேயா
ஹிரிதாகி கோளி கூகிது, ஏளய்யா ஹரியே (ஏளு)

அரளி, மல்லிகை, ஜாஜி  (ஒரு விதமான Jasmine) போன்ற மணம் மிகுந்த பூக்களை
பக்தர்கள் மிகவும் பக்தியுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்
தாமரை மணாளனே லட்சுமிதேவி, பிரம்மா, சிவன் ஆகியவர்களை கொண்டவனே,
கோழி கூவியாயிற்று, எழுந்திருப்பாயாக (ஏளு)

தாசரெல்லரு பந்து, தூளி தர்சன கொண்டு
லேசாகி தாள தண்டிகேயனு பிடிது
ஸ்ரீஷ நெலெயாதி கேசவ நிம்ம பாதவனு
லேசாகி ஸ்மரிசி பொகளுவரு ஹரியே (ஏளு)

தாசர்கள் அனைவரும் அதிகாலையில் உன் தரிசனத்தை வேண்டி
மெதுவாக தாளத்துடன் ஜதி சேர்த்து
ஆதிகேசவனான உன் பாதத்தை நினைத்து
எந்த நேரமும் உன்னை புகழ்ந்தவாறே இருக்கின்றனர் (ஏளு)

***

காலையில் பாடும் ராகத்தில் இந்தப் பாடலை பக்தியுடன் பாடியிருக்கும் வித்யாபூஷணர்.


***

037/365