Thursday, January 19, 2012

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும்?



இந்த உலகத்தில் அனைத்தும் ஸ்ரீமன் நாராயணனே. அவனே முழுமுதற் கடவுள். அவனின்றி ஒரு பொருளும் அசையாது. அனைவரையும் காப்பவன் அவனே. இப்படி அடிக்கடி 'அனைத்தும்', 'அனைத்தும்'ன்னு சொல்றோமே, அந்த 'அனைத்தும்'னா என்ன? அதில் என்னென்ன இருக்கு? ஒரு பட்டியல் போடுவோமா? வேண்டாம். அதுக்கு பதிலா இந்த பாட்டை பார்ப்போம். அந்த பட்டியல் இங்கே இருக்கு.


சகல கிரஹ பல நீனே - இதுதான் அந்த பாடல். மிகவும் புகழ்பெற்ற பாடல். இந்த பாட்டு பாடல் பெற்ற தலம் எது தெரியுமா? மதுரை அருகே உள்ள தான்தோன்றி மலைதான். ஸ்ரீ புரந்தரதாசர், இந்த மலையில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ வேங்கடரமண சுவாமியைக் குறித்து பாடியதே இந்த பாடல்.


***

சகல கிரஹ பல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வ ரக்ஷா (சகல)

அனைத்து கிரகங்களின் பலனையும் கொடுப்பவனே
தாமரை போன்ற கண்களை கொண்டவனே
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே
அகில உலகத்தையும் காப்பவனே (சகல)


ரவிச்சந்திர புத நீனே ராகு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவா ராத்ரியு நீனே நவ விதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)

சூரியன், சந்திரன், புதன், ராகு கேது ஆகிய அனைத்தும் நீயே
சுக்கிரன், வியாழன், சனி, செவ்வாயும் நீயே
பகல், இரவும் நீயே, ஒன்பது விதானங்களும்++ நீயே
மறுபிறப்பென்னும் நோயை குணப்படுத்தும் மருத்துவனும் நீயே (சகல)


பக்ஷ மாசவு நீனே பர்வ காலவு நீனே
நக்ஷத்திர யோக திதி கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்தனே
பக்ஷிவாஹன லோக ரக்ஷிபனு நீனே (சகல) 

பக்ஷ மாதமும்+++ நீயே பர்வகாலங்களும்## நீயே
நட்சத்திரம், யோகம், திதி, கரணங்கள் எல்லாமும் நீயே
திரௌபதியின் மானத்தை காத்தவனே கருட வாகனனே,
இந்த உலகத்தை காப்பவனும் நீயே (சகல)


ருது வத்சரவு நீனே விரத தினங்களு நீனே
க்ரது ஹோம யக்ன சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகத மஹா மஹிமே நீனே (சகல)

ருது வத்சரங்களும் நீயே, விரத நாட்களும் நீயே
ஹோம யக்ஞங்கள் நீயே
மோட்சமடைந்தால் அடைவதும் உன்னையே
என்னுடைய பிரியமான புரந்தர விட்டலனே
வேதங்களுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மனும் நீயே

***

இப்போ சில Legends:

++ ஒன்பது விதானங்கள் எவை? சப்த சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், நிருக்த சாஸ்திரம், கல்ப சாஸ்திரம், சிக்ஷா சாஸ்திரம், சாந்த் சாஸ்திரம், மீமாம்சம், ந்யாயம், வியாகரணம் - இவையே ஆகும்.

+++பக்ஷ மாதம் = பாத்ரபத கிருஷ்ண பக்ஷம். மூதாதையர்களுக்கு உகந்த காலம். அந்த பதினைந்து நாட்களும் (தகுதி உள்ளவர்கள்) தர்ப்பணம், திதி செய்ய வேண்டும் என்பது பாடம்.


##பர்வ காலங்கள் எவை? சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் நாட்கள் பர்வ காலங்கள் எனப்படும். அன்றும் (தகுதி உள்ளவர்கள்) தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும்.


***


இந்த பாட்டினால் தெரிவது என்ன? எந்த கிரகத்தை வணங்கினாலும், எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகி இருப்பவன் 'அவனே'. அதனால், அனைத்தையும் கடைசியில் அவனுக்கே 'அர்ப்பணம்' செய்து, அவனை சரணடைந்தால், மறுபிறப்பு கிடையாது - என்று ஸ்ரீ புரந்தரதாசரே சொல்லும்போது, அதை நாம் மறுக்கமுடியுமா?

*** ***


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

***

1 comment:

Sushima Shekar said...

அருமை! வைணவ மரபுப் படி நாராயணனை சரணடைந்தால் எந்தக் கோள்களும் எந்தத் தொந்தரவையும் தராது என்பதே ஆகும்.