Tuesday, July 12, 2011

அடுத்த பதிவு 2012 ஜனவரி 15ம் தேதிதான்.

புரந்தர விட்டலன் தூங்கற நேரம் வந்தாச்சு. அதனால் நானும் தாசர் பாடல்களுக்கு கொஞ்ச நாள் இடைவெளி விடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இனிமே அடுத்த பதிவு மறுபடி விட்டலன் துயிலெழுந்து கொள்ளும் தினமான மகர சங்கராந்தி அன்று வரும்.

அதுக்குள்ள ரீடரிலிருந்து பதிவை தூக்கிடாதீங்க!

நிறைய அற்புதமான பாடல்கள் வெறும் ஒன்று / இரண்டு சொற்களுக்கு விளக்கம் தெரியாமல் ட்ராஃப்டில் இருக்கின்றன. அவை அடுத்த வருடம் உத்திராயணத்தில் கண்டிப்பாக வரும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

அதுவரை நாம ஏற்கனவே பார்த்த பாடல்களை கேட்டுக் கொண்டிருங்கள்.

ஜெய் ஜெய் விட்டலா!
பாண்டுரங்க விட்டலா!!

*****

Tuesday, June 28, 2011

ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்


ஒரு கோவிலைப் பற்றி, அதில் இருக்கும் கடவுளின் சிறப்புகளைப் புகழ்ந்து தாசர்கள் பாடிய பல பாடல்கள் உள்ளன. அது நமக்குத் தெரியும். ஆனால், ஒரே பாடலில் பல க்ஷேத்ரங்களை குறிப்பிட்டு பாடியதோடல்லாமல், இறைவனை குழந்தை, மகன், தந்தை என்று பல்வேறு உறவுமுறைகளை குறிப்பிட்டு பாடியிருக்கும் ஒரு பாடலும் உண்டு.

அதுதான் இன்றைக்கு பார்க்க இருப்பது.

இந்த புகழ் பெற்ற பாடலில் வரும் க்ஷேத்ரங்கள்: ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், மகிஷபுரி (பேலூர்) மற்றும் உடுப்பி.

***

ரங்க பாரோ பாண்டுரங்க பாரோ
ஸ்ரீரங்க பாரோ நரசிங்க பாரோ (ரங்க)


ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்
ஸ்ரீரங்கனே வாராய் நரசிங்கனே வாராய் (ரங்க)

கந்த பாரோ என்ன தந்தே பாரோ
இந்திரா ரமண முகுந்த பாரோ (ரங்க)


குழந்தையே வாராய் என் தந்தையே வாராய்
இலக்குமியின் கணவனே முகுந்தனே வாராய் (ரங்க)

அப்ப பாரோ திம்மப்பா பாரோ
கந்தர்பனய்யனே கஞ்சி வரத பாரோ (ரங்க)


தந்தையே வாராய் திம்மப்பா (வேங்கடவன்) வாராய்
மன்மதனின் தந்தையே காஞ்சி வரதனே வாராய் (ரங்க)

அண்ண பாரோ என்ன சின்ன பாரோ
புண்ணியமூர்த்தி மஹிஷபுரிய சென்ன பாரோ (ரங்க)


தந்தையே வாராய் எந்தன் செல்லமே (தங்கமே) வாராய்
புண்ணியமூர்த்தி மகிஷபுரியின் சென்ன கேசவனே வாராய் (ரங்க)

விஷ்ணு பாரோ உடுப்பி கிருஷ்ண பாரோ
என் இஷ்ட மூர்த்தி புரந்தர விட்டல பாரோ (ரங்க)


விஷ்ணுவே வாராய் உடுப்பி கிருஷ்ணனே வாராய்
என் இஷ்ட தெய்வமே புரந்தர விட்டலனே வாராய் (ரங்க)


***

வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.



***

Tuesday, June 21, 2011

அஜாமிளன் என்ன உன் அக்கா மகனா?



தாசர்கள் ஸ்ரீமன் நாராயணனை குழந்தையாக, மகனாக, தோழனாக, தகப்பனாக - இப்படி பல்வேறு ரூபங்களில் நினைத்து பாடியிருக்கின்றனர். ஒவ்வொன்றிலும் அந்த உறவிற்கேற்ப - கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல், அதட்டல் என்று பாடும் தொனி மாறும்.

திருப்பதி வேங்கடரமணனிடம், தாசர், தனக்கு தரிசனம் / மோட்சம் தரவேண்டி பல நாட்களாய் வேண்டிக் கொண்டிருக்கிறார். பல்வேறு பாடல்கள் பாடுகிறார். இறைவனுக்கு சேவை செய்கிறார். அப்படியும் இறைவன் வரவில்லை. இவருக்கு கோபம் (மாதிரி!) வந்துவிடுகிறது. அதெப்படி எனக்கு கருணை காட்டாமல் போகலாம்? பல்வேறு சமயங்களில் பல பேருக்கு கருணை
/ தரிசனம் தந்திருக்கிறாயே, ஹரியே, எனக்கு மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறாய்? என்று உதாரணங்கள் காட்டி ‘நானேன மாடிதேனொ’ என்று இறைவனை தோழனாக வரித்து, உரிமையுடன் கோபமாக பாடுகிறார்.

இப்படி கோபப்பட்டு, கடவுளை திட்டுகிறா மாதிரி பாடுவதை ‘நிந்தா ஸ்துதி’ என்று அழைக்கிறார்கள்.

சரி. அது என்ன உதாரணங்கள்?

திரௌபதி தேவி, அகலிகை, துருவன், குசேலன் - இப்படி பல்வேறு உதாரணங்களை சொன்னாலும், highlightஆ ஒண்ணு சொல்றாரு தாசர். அஜாமிளன். தன் வாழ்நாள் முழுக்க பாவ காரியங்களை செய்தவனாகிய அஜாமிளன், மரணப்படுக்கையில், தன் கடைசி மகனான நாராயணனைக் கூப்பிட்டதால், மோட்சத்துக்கு சென்றான். நான் இப்படி கஷ்டப்பட்டு உனக்கு தினமும் சேவை செய்கிறேன். ஆனா நீ என்னடான்னா, எதுவுமே கேட்காத, எதுவுமே (சத்காரியங்கள்) செய்யாத அந்த அஜாமிளனுக்கு முக்தியைக் கொடுத்தாய். அவன் என்ன உனக்கு அக்கா மகனா? என்று கேட்கிறார்.

வாங்க. அந்த பாட்டையும் பொருளையும் பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சிடும். மிகமிகமிக அற்புதமான பாடல்.

***

நானேன மாடிதேனோ ரங்கய்யா ரங்கா
நீ என்ன காய பேகோ (நானேன)


நான் என்ன (பாவம்) செய்தேன், ரங்கா
நீ என்னை காப்பாற்ற வேண்டும் (நானேன)

மானாபி மானவு நின்னது எனகேனு
தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா (நானேன)


(பக்தர்களுக்கு காட்டும்) அன்பு, பாசம் முதலியன உன்னுடையது எனக்கென்ன++
தீன ரக்‌ஷகனே திருப்பதி வேங்கடரமணா (நானேன)

கரிராஜ கரெசிதனே த்ரௌபதி தேவி
பரெதோலே களுஹிதளே
ஹருஷதிந்தலி ரிஷிபத்னிய சாபவ
பரிஹரிசிதேயல்லோ (நானேன)


துரியோதனன் கூப்பிட்டு (அவமானப்படுத்தியபோது) திரௌபதி தேவி
கடிதமா எழுதி அனுப்பினாள்?
(கூப்பிட்ட நேரத்திற்கு வந்து காப்பாற்றினாயல்லவா?)
ஒரு நிமிடத்தில் ரிஷிபத்தினியின் (அகலிகை) சாபத்தை
போக்கினாய் அல்லவா? (நானேன)

ரக்கசசூதனனே கேளோ
த்ருவராயா சிக்கவனல்லவேனோ
உக்கிபருவா கர்மா மாடித அஜாமிள
நின்னக்கன மகவேனோ (நானேன)


அரக்கர்களை அழித்தவனே கேளாய்
துருவ மகாராஜா சின்னப்பையன்தானே?
மறுபிறவி எடுக்கும்படியான பாவத்தை செய்த அஜாமிளன்
(அப்படி எடுக்காமல் மோட்சத்தை கொடுத்து காப்பாற்றினாயே)
அவன் என்ன உன் அக்கா மகனா? (நானேன)

முப்பிடி அவலக்கியா தந்தவனிகே
வப்புவந்தே கொடலில்லவே
சர்ப்பசயன ஸ்ரீ புரந்தரவிட்டலா
அப்ரமேய காயோ (நானேன)


மூன்று பிடி அவல் தந்தவருக்கு
உலகிலுள்ள அனைத்து செல்வங்களையும் நீ கொடுத்தாய் அல்லவா?
சர்ப்பத்தின் மேல் சயனித்திருக்கும் புரந்தர விட்டலனே
இறைவனே (எண்ணிக்கையில் அடங்காதவனே) என்னைக் காப்பாற்று (நானேன)

***

இணையத்தில் இந்த பாடல் சரியாக கிடைக்கவில்லை. ஊரில் taperecorder cassetteலும், என் நினைவில் மட்டுமே இருப்பதால், கிடைத்ததை போட்டிருக்கிறேன். ஒரு பத்தியும் மிஸ்ஸு. பஞ்ச் லைனையும் (தலைப்பு) மாத்தி பாடிட்டாங்க.

ஆனாலும் கேட்கலாம். நல்லாவே பாடியிருக்காங்க.





***

++நான் பக்தவத்சலன் - அதாவது பக்தர்களை அரவணைத்து காப்பாற்றுவேன் என்று நீயே கூறியிருக்கிறாய். அதனால் உன் வாக்குப்படியே நீ என்னை காப்பாற்றி ஆகவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அதைப் பற்றி கவலைப்படுபவன் நீதானேயன்றி நானில்லை.

***

தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா!

***

Saturday, June 18, 2011

வேங்கடரமணனே வாராய்...



புரந்தரதாசருக்கு திருப்பதி வேங்கடரமணன் மேல் தனியான அபிமானம் இருந்தது. அவர் மேல் பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். பாலாஜியின் பார்வை / தயை / தரிசனம் வேண்டி, அப்படி தரிசனம் கிடைத்தபிறகு ஆனந்தத்தில் - இப்படி பல சூழ்நிலைகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.

வேங்கடரமணனே பாரோ என்னும் இந்த பாடலில், அவரை ஸ்ரீ கிருஷ்ணனாக, குழந்தையாக பாவித்து, கொஞ்சி, முத்தம் கொடுத்து, அவன் லீலைகளை பாடி தரிசனம் தரவேண்டுகிறார்.

***

வேங்கடரமணனே பாரோ
சேஷாசல வாசனே பாரோ (வேங்கட)

வேங்கடரமணனே வாராய்
சேஷாச்சலத்தில் (திருப்பதியில்) வசிப்பவனே வாராய் (வேங்கட)

பங்கஜநாபா பரமபவித்ரா சங்கர மித்ரனே பாரோ (வேங்கட)

தாமரைக் கண்ணனே மிகவும் பவித்ரமானவனே
சங்கரனின் நண்பனே வாராய் (வேங்கட)

முத்து முகத மகுவே நினகே
முத்து கொடுவேனு பாரோ
நிர்தயவேகோ நின்னோளகே நானு
பொந்தித்தேனு பாரோ (வேங்கட)


அழகான முகத்தையுடைய குழந்தையே உனக்கு
முத்தம் கொடுக்கிறேன் வாராய்
ஏன் தயவில்லை; உன்னில் நான்
கரைந்திருக்கிறேன் வாராய் (வேங்கட)

மந்தர கிரியனெத்திதானந்த
மூருத்தியே பாரோ
நந்தன கந்த கோவிந்த முகுந்த
இந்திரேயரசனே பாரோ (வேங்கட)


மந்தர மலையை தூக்கியவனே
எப்போதும் ஆனந்தமாய் இருப்பவனே வாராய்
நந்தனின் மைந்தனே; கோவிந்தனே முகுந்தனே
இந்திரனின் அரசனே வாராய் (வேங்கட)

காமனய்யா கருணாளோ
ஷ்யாமள வர்ணனே பாரோ
கோமளாங்க ஸ்ரீ புரந்தர விட்டலனே
ஸ்வாமி ராயனே பாரோ (வேங்கட)


மன்மதனின் தந்தையே கருணையே உருவானவனே
கறுமை நிறத்தவனே அழகானவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே ;
தலைவனே வாராய் (வேங்கட)

***

திரு. ராம் பிரசாத் பாடியிருக்கும் இந்த பாடல், கண்டிப்பா அனைவரின் மனதை கொள்ளை கொள்ளும்.



***

Friday, June 17, 2011

கோவிந்தனை கண்டேன்


ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!


தருமரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பீஷ்மர், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளும் முன்னர், இந்த ஸ்லோகத்தை சொல்கிறார்.

உலகத்துக்கெல்லாம் தலைவன், தேவர்களுக்கெல்லாம் தேவன், ஆயிரம் நாமங்கள் கொண்டவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். அவன் பெயரை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

இதற்கு பிறகே, விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று ஆரம்பிக்கிறார்.

ஸ்லோகத்தில் பகவானின் பெயர்கள் தொடர்ச்சியா வருவது சரி. அதே மாதிரி பாட்டு இயற்ற முடியுமா? புரந்தரதாசரால் முடியும். அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.

தன வாழ்நாள் முழுக்க ஸ்ரீமன் நாராயணனின் புகழைப் பாடியே ; அவன் நாமங்களை சொல்லியே மகிழும் தாசரின் முன்னால் அந்த இறைவன் வந்தால், தாசர் என்ன கேட்பார்?

ஒன்றுமே கேட்க மாட்டார்.

மறுபடி அந்த நாராயணனின் பெயரைச் சொல்லியவாறே பாட ஆரம்பிப்பார். அப்படி அவர் பாடிய பாடல்தான் இது.

***

கண்டேன கோவிந்தன
புண்டரிகாக்ஷ பாண்டவ பக்ஷ கிருஷ்ணன (கண்டேன)


கோவிந்தனை கண்டேன்
புண்டரீகாக்ஷனை ; பாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணனை (கண்டேன)

கேசவ நாராயண ஸ்ரீ கிருஷ்ணன
வாசுதேவ அச்சுதா அனந்தன
சாசிர நாமத ஸ்ரீ ரிஷிகேஷன
சேஷ சயன நம்ம வசுதேவ சுதன (கண்டேன)


கேசவனை நாராயணனை ஸ்ரீ கிருஷ்ணனை
வாசுதேவனை அச்சுதனை அனந்தனை
ஆயிரம் நாமங்கள் கொண்ட ஸ்ரீ ரிஷிகேசனை
சேஷன் மேல் சயனித்திருக்கும் நம்ம வசுதேவரின் புதல்வனை (கண்டேன)

புருஷோத்தம நரஹரி ஸ்ரீ கிருஷ்ணன
சரணாகத ஜன ரக்ஷகன
கருணாகர நம்ம புரந்தர விட்டலன
நேரே நம்பிதேனோ பேலூர சன்னிகனா (கண்டேன)


புருஷோத்தமனை நரஹரியை ஸ்ரீ கிருஷ்ணனை
சரணாகதி செய்யும் பக்தர்களை காப்பவனை
கருணாகரனை; நம்ம புரந்தர விட்டலனை
உன்னையே நம்பியிருக்கிறேன்; பேலூரில் சென்னகேசவனாய் இருப்பவனை (கண்டேன)

***

இந்த அழகான பாடலை பாடும் ஸ்ரீ வித்யாபூஷணர்.




***

Tuesday, June 14, 2011

லக்ஷ்மிதேவி எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறார்?


தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளப்பரிய செல்வத்தையும், வளத்தையும் அளிக்கும் லக்ஷ்மியானவள், ஸ்ரீமன் நாராயணனை ஒருகணமும் விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடை செய்கிறாள்.

லக்ஷ்மி நரசிம்மர்
லக்ஷ்மி நாராயணன்
திருமால்

என்று பெயரில்கூட ஸ்ரீ ஹரியை விட்டுப் பிரியாமல் இருப்பதால்தான், நாம் ஸ்ரீமன் நாராயணனை வழிபடும்போது, 'லக்ஷ்மி சமேத ஸ்ரீ சத்ய நாராயணாய நமஹ' என்று லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபடுகிறோம்.

ஏன், ரெண்டு பேரில் ஒருத்தருக்குத் தெரியாமே இன்னொருத்தரை வணங்கக் கூடாதான்னு கேட்டா - சீதை இல்லாத ராமரை கவர முற்பட்ட சூர்ப்பனகைக்கும் ; ராமர் இல்லாமல் சீதையை கவர்ந்திட்ட ராவணனுக்கும் என்ன கதி ஆனதென்று ராமாயணம் சொல்லும்.

நிற்க.

அனைவரிலும் உத்தமமான, அதிசுந்தரனான, களங்கமில்லாத குணபரிபூர்ணனான ஹரிக்கு எக்காலமும்; எந்நேரமும் பணிவிடை செய்து கொண்டே இருப்பதென்பது எப்படிப்பட்ட புண்ணியம் தரும் செயலாகும்? அப்படி செய்வதற்கு லக்ஷ்மிதேவி எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்?

இதைத்தான் புரந்தரதாசர், 'ஏனு தன்யளோ' என்னும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார்.

இப்போ பாடல்.

***

ஏனு தன்யளோ லக்குமி
எந்தா மான்யளோ
சானு ராகதிந்தா ஹரியா
தானே சேவே மாடுதிஹளு (ஏனு)


எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தவளோ லட்சுமி
எவ்வளவு மரியாதைக்கு உரியவளோ
சானு ராகத்தினால் அந்த ஹரியை
சேவை செய்து கொண்டிருக்கிறாள் (ஏனு)

கோடி கோடி ப்ருத்யரிரலு
ஹாடகாம்பரனா சேவே
சாடியில்லதே பூர்ண குணலு
ஸ்ரேஷ்டவாகி மாடுதிஹளு (ஏனு)


கோடி (எண்ணிக்கை) பணியாட்கள் இருந்தும்
ஸ்ரீ ஹரியின் சேவையினை
சாடியில்லதே ; குற்றமில்லாதவளான லட்சுமி
மிகவும் அருமையாக செய்து வருகிறாள் (ஏனு)

சத்ர சாமர வ்யஜன பர்யங்க
பாத்திர ரூபதல்லி நிந்து
சித்ர சரிதனு ஹாத ஹரியா
நித்ய சேவே மாடுதிஹளு (ஏனு)


குடை சாமரம் விசிறி கட்டில்
ஆகிய ரூபங்களில் நின்று
அதி சுந்தரனாகிய ஹரியை
தினமும் பணிவிடை செய்கிறாள் (ஏனு)

சர்வஸ்தலதி வ்யாப்தனாதா
சர்வதோஷ ரஹிதனாதா
கருட கமனன நாத
புரந்தர விட்டலன சேவிசுவளு (ஏனு)


எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும்
களங்கமில்லாதவனும்
கருடனை வாகனமாகக் கொண்டிருப்பவனுமாகிய
புரந்தர விட்டலனை வணங்குபவள் (ஏனு)

***

புத்தூர் நரசிம்ம நாயக் என்பவர் பாடியது:



மஹாலக்ஷ்மி ஷெனாய் அவர்கள் பாடியது:



***

Tuesday, June 7, 2011

குரு பிரம்மா குரு விஷ்ணு.

***

குரு = ஆசிரியர்.

முந்தைய காலங்களில், வேத சாஸ்திரங்களை மாணவர்கள், குருகுல வாசம் செய்து படித்து வந்தனர். அதாவது, குருவின் வீட்டிலேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்று வந்தனர். தன்னலமில்லாமல் கற்றுக் கொடுக்கும் குருவை, தெய்வத்துக்கு ஒப்பிட்டு,

குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:


என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மாயாஜாலங்கள் எதுவும் செய்யாமல்; அந்த மாயாஜாலங்களை செய்யும் நாராயணனின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும், பல்வேறு வித்யைகளை கற்றுக் கொடுப்பவரை குருவாக தேர்ந்தெடுத்தல் நலம்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல குருவை தேர்ந்தெடுத்து, அவரிடம் சரணடைந்து அனைத்தையும் கற்கும் பட்சத்தில், இதைவிட முக்திக்கு குறுக்குவழி எதுவும் கிடையாது என்று தாசர் சொல்கிறார்.

***

குருவின் முக்கியத்துவத்தை குறித்து பாடும் இந்த பாடலை பாடும்போது அவன் குருவைப் பற்றியும் சில வார்த்தைகள்.

பல வருடங்களுக்கு முன்னர், அவனுக்கும் ஒரு குரு கிடைத்தார். அதுவும் அவனாக தேடவில்லை. குருவாக தேடி அவனிடம் வந்தார். வேத, சாஸ்திரங்கள், ஜோசியம், வான் சாஸ்திரம், ஹரிதாஸ சாஹித்யங்கள், உபன்யாசம் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர். ஒரு சமயம் அவருக்கு தவறுதலாக செய்யப்பட்ட கண் அறுவை சிகிச்சையினால், ஒரு வருடம் வரை கண் பார்வை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். அச்சமயம் அவனும் வேலையில்லாமல் (அப்பவுமா?) ச்சும்மா இருந்ததால், அவருடனே முழுவதும் இருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அடைந்தான். அவர் மகன் / மகள்களைப் போல் அவனை அவரும், அவருடைய உறவினர்கள் அனைவரும் நடத்தினர். தற்போதும் அப்படியே.

அவருக்குத் தெரிந்த பற்பல விஷயங்களை தொடர்ந்து பல வருடங்களுக்கு, அவர் அவனுக்கு கற்றுத் தந்தார். அவன் எவ்வளவு கத்துக்கிட்டான்றது தனிக்கதை.

திருவல்லிக்கேணியில் வாழும் அவனது குருவிற்கு தற்போது 85 வயது.

ஸ்ரீ குருப்யோ நம:

***

குருவின குலாமனாகுவ தனகா
தொரயதண்ண முகுதி (குருவின)


குருவிற்கு அடிமையாய் ஆகாதவரை
கிடைக்காது முக்தி (குருவின)

பரிபரி ஷாஸ்த்ரவனேகவனோதி
வ்யர்தவாய்து பகுதி (குருவின)


விதவிதமான சாஸ்திரங்கள் பலவற்றை படித்தாலும்
வீணாகிப் போய்விடும் பக்தி (குருவின)

ஆறு ஷாஸ்த்ரவ ஓதிதரேனு
மூராறு புராணவ முகிசிதரேனு
சாரி சஜ்ஜனர சங்கவ மாடதே
தீரனாகி தான் மெரெதரேனு (குருவின)


ஆறு சாஸ்திரங்களை படித்தாலென்ன
(3x6) 18 புராணங்களை முடித்தாலென்ன
கற்று உணர்ந்த பெரியவர்களிடம் எதையும் கற்காமல்
கர்வத்துடன் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னாலும் (குருவின)

கொரளலு மாலெய தரிசிதரேனு
கரதல்லி ஜபமணி எணிசிதரேனு
மருளனந்தெ ஷரீரக்கே லேபவா
ஒரசிகொண்டு தா திரிகிதரேனு (குருவின)


கழுத்தில் (துளசி) மாலை அணிந்தாலென்ன
கைகளில் ஜபமணி இருந்தாலென்ன
ஹரிதாஸனென்று உடம்பில் கோபிசந்தனத்தை
தரித்துக் கொண்டு சுற்றினாலும் (குருவின)

நாரியர சங்கவ அளிதரேனு
ஷரீரக்கே துக்கவ படிசிதரேனு
மரையண்ண ஸ்ரீ புரந்தர விட்டலன
மரெயதே மனதொளு பெரெயுவ தனகா (குருவின)


பெண்களை புறக்கணித்து சன்னியாசி ஆனாலென்ன
பட்டினி கிடந்து உடம்பை துக்கப் படுத்தினாலென்ன
ஸ்ரீ புரந்தரவிட்டலனை மறக்காமல்
மனதில் வைத்து நினைக்கும் வரை (குருவின)

***

வித்யாபூஷணர் அருமையாக பாடும் இந்தப் பாடல்:



***

Saturday, May 28, 2011

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி!

பகவான் கண்ணனுக்கு சுப்ரபாதம், அவன் குறும்புகள், விளையாட்டுகள், ஆகிய எல்லாவற்றிற்கும் பாடிய ஹரிதாஸர்கள், அந்த கண்ணன் தூங்குவதற்கும் நிறைய லாலி பாடல்கள் பாடியிருக்கின்றனர். 20-25 பத்திகள் கொண்ட லாலி பாட்டுகளும் உண்டு. அவைகளில் மிகவும் புகழ்பெற்றது இந்த ‘தூகிரே ரங்கன’ பாடலாகும்.

ராகவேந்திரர் மடங்களில் மாலை நேர பூஜையில், வேத பாராயணங்கள், ஸ்தோத்திரம், பாட்டு, நைவேத்தியம் எல்லாம் ஆனபிறகு, பகவானை தூங்கச் செய்கிற வேளையும் வரும். ‘லாலி ப்ரியா லாலி சேவா மமதாரயா’ என்று சொன்னவுடன், யாராவது லாலி பாட ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் அனைவரும் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.


***

தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன
தூகிரே அச்சுதானந்தன (தூகிரே)


ரங்கனை, கிருஷ்ணனை, அச்சுதனை, அனந்தனை
தாலாட்டுங்கள் (தூகிரே)

தூகிரே வரகிரியப்பா திம்மப்பன
தூகிரே காவேரி ரங்கய்யன (தூகிரே)

திருப்பதியில் இருக்கும் பாலாஜியை,
காவேரிக்கரையில் இருக்கும் ரங்கனை
தாலாட்டுங்கள் (தூகிரே)

நாகலோகதல்லி நாராயண மலக்யானே
நாககன்னிகெயரு தூகிரே
நாகவேணியரு நேண பிடிதுகொண்டு
பேகனே தொட்டில தூகிரே (தூகிரே)


நாகலோகத்தில் நாராயணன் படுத்திருக்கிறான்
நாககன்னிகைகள் தூங்கச் செய்யுங்கள்
நீளமான கூந்தலையுடைய பெண்கள் தொட்டில்கயிறை பிடித்துக்கொண்டு
வேகமான தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)

இந்திரலோகதல்லி உபேந்திர மலக்யானே
இந்துமுகியரல்ல தூகிரே
இந்திரகன்னிகேயரு சந்ததி பந்து
முகுந்தன தொட்டில தூகிரே (தூகிரே)

இந்திரலோகத்தில் உபேந்திரன் படுத்திருக்கிறான்
சந்திரனைப் போல் முகத்தையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்
இந்திரலோகத்திலுள்ள பெண்கள் உடனே வந்து
முகுந்தனின் தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)

ஆலத எலய மேலே ஸ்ரீலோல மலக்யானே
நீலகுந்தலேயரு தூகிரே
வ்யாலஷயன ஹரி மலகு மலகெந்து
பாலகிருஷ்ணய்யன தூகிரே (தூகிரே)

ஆலமர இலையில் லக்‌ஷ்மியின் கணவன் நாராயணன் படுத்திருக்கிறான்
நீளமான கூந்தலையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்
ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் ஹரியை
தூங்கு தூங்கு என்று தாலாட்டுங்கள் (தூகிரே)

சாசிர நாமனே சர்வோத்தமனெந்து
சூசுத்தா தொட்டில தூகிரே
லேசாகி மடுவினோளு சேஷன துளுதிட்ட
தோஷ விதூரன தூகிரே (தூகிரே)

ஆயிரம் நாமங்கள் கொண்டவனே, நீயே அனைவரிலும் உத்தமமானவன் என்றவாறு
ஜபித்துக் கொண்டே தாலாட்டுங்கள்
விஷசர்ப்ப குளத்தில் (காளிந்தி) சர்ப்பத்தின் மேல் குதித்தாடிய
களங்கமில்லாதவனை தாலாட்டுங்கள் (தூகிரே)

அரளேலே மாகாயி கொரள முத்தினஹார
தரளன தொட்டில தூகிரே
ஸ்ரீதேவி ரமணன புரந்தரவிட்டலன
கருணதி மலகெந்து தூகிரே (தூகிரே)

நெற்றியில் ஆபரணமும்; கழுத்தில் முத்து மாலையும் அணிந்துள்ள
குழந்தையின் தொட்டிலை தாலாட்டுங்கள்
ஸ்ரீதேவி ரமணனை புரந்தரவிட்டலனை
தூங்கு என்று வேண்டிக் கொண்டு தாலாட்டுங்கள் (தூகிரே)

***

P.சுசீலாம்மா அருமையாய் பாடியுள்ள இந்த பாடல்:
http://www.raaga.com/player4/?id=171796&mode=100&rand=0.7889869361830932

***

யூட்யூபில் கிடைத்த இன்னொரு காணொளி:



***

Tuesday, May 24, 2011

வைகுண்டம் எப்படி இருக்கும்?

புரந்தரதாசர் சமஸ்கிருதத்தில் பாடியுள்ள பாடல்.
மிகச் சிறிய பாடல்
மிகவும் புகழ் பெற்ற பாடல்.
முதல் வரியைக் கேட்டவுடன், MLV அம்மாவின் குரல் டக்கென்று காதில் கேட்கும் பாடல்.

அது என்ன?

வைகுண்டம் எப்படி இருக்கும்?

வைகுண்டத்தைப் பற்றி புரந்தரதாசர், கனகதாசர் ஆகியோர் பல பாடல்கள் பாடியிருக்கின்றனர். கருணையே உருவான ஸ்ரீமன் நாராயணன் - எவ்வித
களங்கமும் இல்லாத சுந்தர வடிவானவன் - காதில் குண்டலங்கள்; கழுத்தில் ஆபரணங்கள்; முகத்தில் புன்னகை - லக்ஷ்மி தேவியுடன் ஆதிசேஷன் மேல்
வீற்றிருப்பான். பிரம்ம, ருத்ராதிகள் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்க, வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கும். நாரதர் முதலானோர் இறைவனைக்
குறித்து பஜித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படியான வைகுண்டக் காட்சியை பின்வரும் பாடலில் தாசர் விவரிக்கிறார்.




வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)


வேங்கடாசலத்தில் (திருப்பதியில்) வீற்றிருப்பவன் வைகுண்டத்தில் வசிக்கிறான்
தாமரை மலர் போன்ற அழகான கண்கள்; எவ்வித களங்கமுமில்லாத தூய்மையானவன்
இரு கைகளிலும் சங்கு, சக்கரம் தரித்த அழகே வடிவானவன் (வேங்கடாசல)

அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)

எப்பொழுதும் அவன் பேரை ஜபித்துக் கொண்டே இருக்கும் பிரம்மன்;
கூடவே தம்புரா வைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருக்கும் நாரதர் (வேங்கடாசல)

மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)


பளபளக்கும் குண்டலங்களை அணிந்திருக்கும் மதனகோபாலன்
பக்தர்களை காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனே (வேங்கடாசல)
***

MLV அம்மா மிகவும் பக்திபூர்வமாக பாடியது:



***
விசாகா ஹரி மிகவும் விஸ்தாரமாக பாடியது:



***


Friday, May 20, 2011

ஏன் எப்பவும் கடவுளை நினைக்கணும்?


தம்பி, கோயிலுக்கு போ. கடவுளை நினை. மனசுக்கு அமைதி கிட்டும்.

போங்கண்ணா. எனக்கு தியானம் எப்படி பண்ணனும்னு தெரியாது. கடவுள் ஸ்லோகம் / பாட்டு எதுவுமே தெரியாது. கோயில் எதுவுமே பக்கத்துலே இல்லே. ரொம்ப தூரம் போய்வர நேரம் இல்லே. உங்களுக்கு வேறே வேலையே இல்லே!!

கடவுளை நினையாதிருப்பதற்கு எவ்வளவு வேணா சாக்கு சொல்லலாம். ஆனா, அப்படி சொல்லக்கூடாதுன்னு - நான் சொல்லலே - புரந்தரதாசர் சொல்றாரு.

ஆமா. கடவுளை எந்நேரமும் நினைச்சிக்கிட்டிருந்தா என்ன நடக்கும்?

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இதுவும் நான் சொன்னதில்லை. அட, புரந்தரதாசரும் சொல்லவில்லை. சொன்னது நம்ம அய்யன்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


சரியா.

அதனால், இனிமே நோ சாக்கு. ஒன்லி ராம ராம.

இதே கருத்துகளை புரந்தரதாசர் எப்படி எல்லாருக்கும் புரியும்படி கன்னடத்தில் பாடியிருக்கிறார் பாருங்க. பிறகு கேளுங்க.


***

கலியுகதொளு ஹரி நாமவ நெனேதரே
குலகோடிகளு உத்தரிசுவவோ ரங்கா (கலியுக)


இந்த கலியுகத்தில், ஹரியின் பெயரை நினைத்தால்
உன் குலம் முழுவதற்கும் புண்ணியம் கிட்டும் (கலியுக)

சுலபத முக்திகே சுலபவெந்தேணிசுவ
ஜலருஹநாபன நெனே மனவே (கலியுக)


சுலபமாய் முக்தி பெற, சுலபமாய் நினைவில் வைக்கும்படியான
ஸ்ரீ கமலாநாபனின் (பத்மநாபனின்) பெயரை நினைத்திரு மனமே (கலியுக)

ஸ்னானவனறியேனு மௌனவனறியேனு
த்யானவனறியேன் எந்தெணபேடா
ஜானகிவல்லப தசரத நந்தன
கானவினோதன நெனெ மனவே (கலியுக)


ஸ்னானம் எப்படி செய்யணும்னு தெரியாது; மௌனமாய் இருக்கத் தெரியாது
தியானம் செய்யத் தெரியாது என்று சொல்ல வேண்டாம்
ஜானகியின் கணவனை, தசரதனின் மைந்தனை
பாடலை விரும்பிக் கேட்கும் ஸ்ரீ ராமனை நினைத்திரு மனமே (கலியுக)

அர்ச்சிஸலறியேனு மெச்சிசலறியெனு
துச்சனு தானெந்தெணபேடா
அச்சுதானந்த கோவிந்த முகுந்தன
இச்சேயிந்தலி நெனெமனவே (கலியுக)


அர்ச்சனை / பூஜை செய்யத் தெரியாது; கடவுளை மெச்சவும் (புகழ் பாடவும்) தெரியாது
(அதனால்) நான் ரொம்ப கெட்டவன் என்று நினைக்க வேண்டாம்
அச்சுதன், ஆனந்தன், கோவிந்தன், முகுந்தன், (ஆகிய ஹரியை)
பாசத்துடன் நினைத்திரு மனமே (கலியுக)

ஜபவொந்தறியேனு தபவொந்தறியேனு
உபதேச வில்ல எந்தெணபேடா
அபார மஹிமே ஸ்ரீ புரந்தரவிட்டலன
உபாயதிந்தலி நெனெ மனவே (கலியுக)


(மந்திரங்களை) ஜெபிக்கத் தெரியாது; தபஸ் (தியானம்) செய்யத் தெரியாது
(தக்க குருவினிடத்தில்) உபதேசமும் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டாம்
பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
உத்தியுடன் (ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே (கலியுக)

***

திரு.ஸ்ரீராம் கங்காதரன் அருமையா பாடியிருக்காரு.



***

Prof.வெங்கடேஷ் குமார் மிக அற்புதமா பாடிய இந்த பாடல்.



***

Wednesday, May 18, 2011

தாயும் நீயே! தந்தையும் நீயே!

சரணாகதி தத்துவம்.

இப்படி சொன்னதும் நினைவில் வரக்கூடிய ஸ்லோகம் என்ன? பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதுதான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ!
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி மா ஷுசஹா!


அர்ச்சுனா! அனைத்தையும் துறந்து என்னை சரணடை. அனைத்து பாவங்களிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன். கவலைப்படாதே.

அர்ஜுனனைப் போல் நானும் உன்னை சரணடைந்தேன். என் தாய், தந்தை, நண்பர்கள், பொன், பொருள் அனைத்தும் நீயே. நீ இருக்கும்போது எனக்கு எந்த கவலையும் இல்லை என்று ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்தான் - நான் ஏகே படவனு.

***


நான் ஏகே படவனு நான் ஏகே பரதேசி
ஸ்ரீநிதி ஹரி எனகே நீ இருவ தனகா (நான் ஏகே)


நான் ஏழையும் அல்ல, அனாதையும் அல்ல
ஸ்ரீ நிதியான ஹரி நீ இருக்கும்வரை (நான் ஏகே)

புட்டிசித்த தாயி தந்தே இஷ்ட மித்ரனு நீனே
அஷ்ட பந்துவு சர்வ பளக நீனே
பெட்டிகேயோளகின அஷ்டா பரண நீனே
ஸ்ரேஷ்ட மூர்த்தி கிருஷ்ணா நீனிருவ தனகா (நான் ஏகே)


பிறவியைக் கொடுத்த தாய்/தந்தை நீயே; நண்பனும் நீயே
சுற்றம் சூழ இருக்கும் உறவினர்களும் நீயே
பெட்டிக்குள் இருக்கும் என் ஆபரணங்களும் நீயே
அனைவரிலும் உத்தமனான கிருஷ்ணனே, நீ இருக்கும் வரை (நான் ஏகே)

ஒட ஹுட்டிதவா நீனே ஒடலிகக்குவ நீனே
உடலு ஹொ தியலு வஸ்த்ர கொடுவே நீனே
மடதி மக்கள நெல்ல கடே ஹாயிசுவவ நீனே
பிடதி சலஹுவ ஒடேயா நீனிருவ தனகா (நான் ஏகே)


கூடப்பிறந்த சகோதர/சகோதரியும் நீயே; எனக்கு உணவளிப்பவனும் நீயே
இந்த உடலை மறைக்கும் ஆடைகளை கொடுப்பவனும் நீயே
மனைவி / குழந்தைகளுக்கு எல்லா இடத்திலும் அருள்/நன்மை பயப்பவன் நீயே
மறக்காமல் என்னை காப்பாற்றும் தலைவனே, நீ இருக்கும் வரை (நான் ஏகே)

வித்யா ஹேளுவ நீனே புத்திகலிசுவே நீனே
உத்தாரகர்த்த மம ஸ்வாமி நீனே
முத்து ஸ்ரீ புரந்தரவிட்டல நின்னடி மேலே
பித்து கொண்டிருவ எனகேதர பயவு (நான் ஏகே)


கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியனும் நீயே; நல்ல புத்தி கொடுப்பவனும் நீயே
என்னை முன்னேற்றும்படி செய்யும் என் தலைவனும் நீயே
ஸ்ரீ புரந்தரவிட்டலா, உன் பாதங்களைத் தொட்டு
எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் எனக்கு எதற்கு பயம்? (நான் ஏகே)

***

MS அம்மா மனமுருகி பாடும் இந்த பாடல்:



***

ரஞ்சனி & காயத்ரி பாடியது:



***

Monday, May 16, 2011

வெங்கி பாலாஜியின் குலதெய்வம் யாரு?

பல பேருக்கு திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான் இந்த பதிவின் ஹீரோ - ஸ்ரீ நரசிம்மர்.



அட ஆமாங்க.

ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார். அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

***

சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.


ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.

மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.

***

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஹரிதாஸர்கள் பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று ஸ்ரீ புரந்தரதாஸரால் பாடப்பட்ட ‘சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே’. அதை இன்று பார்ப்போம்.

***

சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே
நாமகிரீஷனே


சிம்ம ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியே

ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு
சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே


ஒருமனதாக உன்னை வணங்கினால்
கண்டிப்பாக காப்பேன் என்று கூறிய ஸ்ரீஹரியே (சிம்ஹ)

தரளனு கரெயே ஸ்தம்பவ பிரியே
தும்ப உக்ரவ தோரிதனு
கரளனு பகெது கொரளொளகிட்டு
தரளன சலஹித ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)


ஹிரண்யகசிபு கூப்பிட்டவுடன் தூணை உடைத்துக்கொண்டு (வந்த நரசிம்மர்)
மிகவும் உக்கிரத்தை காட்டினார்
அவனைக் கொன்று தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு
அனைவரையும் காத்த ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)

பக்தரெல்ல கூடி பஹுதூர ஓடி
பரம சாந்தவனு பேடிதரு
கரெது தன் சிரியனு தொடெயொளு குளிசித
பரம ஹருஷவனு பொந்தித ஸ்ரீஹரி (சிம்ஹ)


பக்தர்கள் அனைவரும் (நரசிம்மரின் உக்கிரத்தால் பயந்து) வெகுதூரம் ஓடி
கோபத்தை குறைக்குமாறு வேண்டினர்
தன் பக்தனை (பிரகலாதனை) கூப்பிட்டு, தன் மடியில் உட்காரவைத்து
தன் கோபத்தை குறைத்தான் ஸ்ரீஹரி (சிம்ஹ)

ஜயஜயஜயவெந்து ஹுவ்வனு தந்து
ஹரிஹரிஹரியெந்து சுரரெல்ல சுரிசி
பய நிவாரண பாக்ய ஸவரூபனே
பரமபுருஷ் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)


வெற்றி வெற்றி என்று பூக்களை கொண்டுவந்து
ஹரி ஹரி என்று அனைவரும் (நரசிம்மரின் மேல்) அர்ச்சனை செய்ய
பயத்தைப் போக்கும் பாக்கியங்களை கொடுக்கும்
உத்தமமான கடவுள் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)

***

முழுப்பாடலின் ஒலி/ஒளித்துண்டு எங்கேயும் கிடைக்கலை. நானே பாடி போடலாம்னா, இதை படிக்கிற ஒரு நாலைஞ்சு பேரையும் எதுக்கு பயமுறுத்தணும்னு அதையும் செய்யலை. அதனால், கிடைத்தது மட்டும் இங்கே. இந்த பாட்டுக்கு வேறெதாவது சுட்டி இருந்தா சொல்லுங்க.

விசாகா ஹரி:



சேலம் ஸ்ரீராம்:



***

ஸ்ரீநரசிம்ம ஜயந்தியான இந்த நல்ல நாளில் (5/16/2011) அந்த ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

***

Tuesday, May 10, 2011

பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, பூச்சாண்டியை கூப்பிடாதே!



கண்ணனின் விளையாட்டுகள், குறும்புகள் தாங்க முடியலை யசோதாவால். ஒரு நாளைப் போல தினமும் புகார்கள் வந்து குவியுது. வெண்ணையை திருடிட்டான், பாலைக் கொட்டிட்டான் அப்படி இப்படின்னு. குழந்தையை திட்டறா. ”என்ன பண்றேன் பாரு, இப்போ. முடியல என்னாலே”. கயிறால் கட்டி போட முயற்சிக்கறா. ம்ஹூம். அதுவும் முடியல. ”கூப்பிடறேன் பாரு பூச்சாண்டியை. அப்பத்தான் நீ அடங்குவே”.

அனைத்தும் அறிந்திருந்தாலும், இந்த உலகத்தையே காப்பவனானாலும், அந்த சமயத்தில் ஒரு குழந்தைதானே. அந்த தாய்க்கு மகன்தானே - பாலகிருஷ்ணன், அப்படியே பயப்படறா மாதிரி நடிக்கிறானாம். நடுங்கினானாம். ”அம்மா. வேணாம்மா. பூச்சாண்டியை கூப்பிடாதே. பயமாயிருக்கு(!!). நீ சொல்ற மாதிரியெல்லாம் கேக்கறேன். என்னை விட்டுடு. இனிமே நல்ல பிள்ளையா நடந்துக்கறேன்”.

ச்சின்ன குழந்தைமேல் தாய்க்கு வரும் கோபம் எவ்வளவு நேரம் தாங்கும். அதன் மழலையான குரலை கேட்கும்வரை. யசோதையும் கண்ணனை அப்படியே வாரியணைத்து முத்தமாரி பொழியறாளாம்.

இந்த காட்சியை ஸ்ரீ புரந்தரதாஸர் அப்படியே இந்த பாடலில் பாடியுள்ளார் - கும்மன கரெயதிரே. பாவம், அந்த குழந்தை ’பூச்சாண்டிக்கு’ பயந்து என்னல்லாம் செய்ய மாட்டேன்னு அம்மாகிட்டே சொல்லுது பாருங்க.


***

கும்மன கரெயதிரே அம்மா நீனு
கும்மன கரெயதிரே


பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, நீ
பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா

சும்மனே இருவேனு அம்மிய பேடெனு
மம்மு உண்ணுதேனு அம்மா அளுவுதில்லா (கும்மன)


சும்மா இருப்பேன், முலைப்பால் கேட்கமாட்டேன்
உணவு உண்கிறேன், அம்மா இனிமேல் அழமாட்டேன் (கும்மன)

ஹெண்ணுகளிருவல்லிகே அவர
கண்ணு முச்சுவுதில்லவே
சின்னர படியேனு அண்ணன பையேனு
பெண்ணெய பேடேனு மண்ணு தின்னுவுதில்லா (கும்மன)


சிறுமிகள் இருக்குமிடத்தில் போய் அவர்களின்
கண்களை மூடமாட்டேன் (தொந்தரவு செய்ய மாட்டேன்)
சிறியவர்களை அடிக்க மாட்டேன்; அண்ணனை திட்ட மாட்டேன்
வெண்ணையை கேட்க மாட்டேன்; மண்ணைத் தின்ன மாட்டேன் (கும்மன)

பாவிகே போகே காணே அம்மா நானு
ஹாவினொளாடே காணே
ஆவின மொலெயூடே கருகள பிடே நோடே
தேவரந்தே ஒந்து டாவிலி கூடுவே (கும்மன)


கிணற்றடிக்கு போக மாட்டேன் அம்மா நான்
பாம்புகளோடு விளையாட மாட்டேன்
பசுக்களிடத்தில் (பால் குடிக்க) கன்றுகளை விட மாட்டேன்
கடவுளைப் போல் ஒரு இடத்தில் (சும்மா) அமர்ந்திருப்பேன் (கும்மன)

மகன மாதன்னு கேளுத்தா கோபிதேவி
முகுளு நகெயு நகுதா
ஜகதோதடேயனா ஸ்ரீ புரந்தர விட்டலனா
பிகிதப்பி கொண்டளு மோகதிந்தாக (கும்மன)


மகனின் பேச்சைக் கேட்டு தாயானவள்
நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு
இந்த உலகத்தைக் காப்பவனாகிய ஸ்ரீ புரந்தர விட்டலனை
மிகுந்த பாசத்துடன் வாரியணைத்துக் கொண்டாள். (கும்மன)

***

இந்த அழகான பாடலை, வித்யாபூஷணரின் குரலில் கேளுங்கள்.



***

ராஜஸ்ரீ வாரியரின், அழகான பரதநாட்டிய நடனத்தில், ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தக் குறும்பினை பாருங்கள்.



***

Thursday, May 5, 2011

கூப்பிட்டால் வரக்கூடாதா?

தாசர் பாடல் போட்டிகளில் பங்கேற்று பாடுபவர்கள், மிகமிக சின்னதாய், எளிமையாய் சில பாடல்களை தேர்ந்தெடுத்து, அதை மனப்பாடம் செய்து கொண்டு பாட ரெடியாய் இருப்பார்கள். புகழ்பெற்ற சில பாடல்கள் எல்லார் பட்டியலிலும் இருக்கும். அப்படி எளிமை, இனிமை, ச்சின்னது இப்படி எல்லா அளவுகோலிலும் வெற்றி பெற்று, அனைவர் பட்டியலிலும் இடம்
பிடிக்கும்படியான ஒரு பாடல்தான் இன்னிக்கு பார்க்கப் போகிறோம்.

’கரெதரே பரபாரதே’ என்னும் இந்தப் பாடலை பாடியவர் கமலேஷ விட்டலதாசர். வாழ்ந்த காலம் 1780AD. 'கமலேஷ விட்டலா' என்னும் முத்திரையை இணைத்து பற்பல பக்திப் பாடல்களை பாடியவர் இவர்.
மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்து பாடப்பட்டுள்ளது இந்த பாடல்.


***

கரெதரே பரபாரதே
குரு ராகவேந்திரா (கரெதரே)


கூப்பிட்டால் வரக்கூடாதா
குரு ராகவேந்திரா (கரெதரே)

வர மந்திராலய புர மந்திர தவ
சரண சேவகரு கரவா முகிது (கரெதரே)


(புனித தலமான) மந்திராலயத்தில் உங்கள் கோவிலின் முன் நின்று
சேவை செய்யும் பக்தர்கள் கைகூப்பி தொழும்போது (கரெதரே)

ஹரிதாசரு சுஸ்வர சம்மேலதி
பரவசதல்லி பாயி தெரது கூகி (கரெதரே)


ஹரியின் பக்தர்கள் நல்ல ராக, தாளத்துடன்
பக்தி பரவசத்துடன் உன்னை போற்றி பாடி, தொழும்போது (கரெதரே)

பூஷரபித கமலேஷ விட்டலன்ன
தாசகிரேஸரு ஈ சமயதல்லி (கரெதரே)


மன்மதனின் தந்தையான கமலேஷ விட்டலனே
உன் தாசர்கள் உன்னை வணங்கும் இந்த தருணத்தில் (கரெதரே)

***

பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்‌ஷாய நமதாம் காமதேனவே


அவரைக் குறித்து பஜிப்பவர்களுக்கு கல்பவிருக்‌ஷமாகவும், அவர் பெயரை ஜபிப்பவர்களுக்கு அனைத்தையும் காமதேனுவுமாய் இருப்பவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்று இந்த சுலோகம் சொல்கிறது.

***

இந்தப் பாடலை பாடுபவரின் ஒரு காணொளி; பின்னர் வாத்திய இசையிலும், ஒலித்துண்டாகவும் இதே பாட்டு.





http://www.muzigle.com/track/karedare-barabarade#!track/karedare-barabarade

***

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

***

Tuesday, May 3, 2011

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?



108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீரங்கம். திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீரங்கநாதர்.

த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்கள் / பாசுரங்கள் இந்த விக்கி பக்கத்தில் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி-தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர். அவற்றில் ஒரு பாட்டுதான் இன்று பார்க்கப் போவது.

***

புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார். வாழ்ந்த ஆண்டு 1420 - 1486. ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.



கன்னடத்தில் செய்யப்படும் எந்த கதாகாலட்சேபத்திலும் முதலில் சொல்லப்படும் ஸ்லோகத்தில், ஸ்ரீபாதராயருக்கு வந்தனம் செய்து துவக்குவதே மரபாக உள்ளது. அந்த ஸ்லோகம் இதோ.

நம: ஸ்ரீபாதராஜாய நமஸ்தே வியாஸயோகினே
நம: புரந்தரார்யாய விஜயார்யாய தே நம:


கிருஷ்ணா நீ பேகனே பாரோ - என்று பாடிய ஸ்ரீ வியாஸராயருக்கு வித்யாகுருவானவர் நம் ஸ்ரீபாதராயர்.

தன் எல்லாப் பாடல்களின் முடிவிலும் ‘ரங்க விட்டலா’ என்று முத்திரையை பதித்து பாடிய ஸ்ரீ பாதராயர், கர்னாடகாவில் முளபாகலு என்னும் இடத்தில் சமாதியடைந்தார்.

இன்று இவரின் புகழ்பெற்ற பாடலான ‘கண்களித்யாதகோ’வை பார்க்கலாம்.

கண்களித்யாதகோ
காவேரி ரங்கன நோடதா


இந்த கண்கள் எதற்கு
காவேரி ரங்கனை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

ஜகங்களொளகே மங்கள மூருத்தி
ரங்கன ஸ்ரீ பாதங்கள நோடதா (கண்களித்யாதகோ)


இந்த உலகத்தில் மிக அழகான வடிவான
ஸ்ரீ ரங்கனாதனின் பாதங்களை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

எந்திகாத ரொம்மே ஜனரு
பந்து பூமியல்லி நிந்து
சந்திர புஷ்கரணி ஸ்நாநவ மாடி
ஆனந்த திந்தலி ரங்கன நோடதா (கண்களித்யாதகோ)


என்றாவது (ஒரு நாளாவது) இந்த மக்கள்
வந்து இந்த புண்ணிய பூமியில் நின்று
சந்திர புஷ்கரணியில் நீராடி
ஆனந்தத்துடன் ஸ்ரீ ரங்கனை பாராமல் (கண்களித்யாதகோ)

ஹரி பாதோதக சம காவேரி
விரஜா நதியல்லி ஸ்நாநவ மாடி
பரம வைகுண்ட ரங்கன மந்திர
பர வாசுதேவன நோடதா (கண்களித்யாதகோ)


ஹரியின் பாதம் பட்ட நீருக்கு சமமானதும்
பூலோக விரஜா நதியுமான காவேரியில் குளித்து
வைகுண்ட ராஜனான ரங்கனின் கோயிலில்
அந்த வாசுதேவனை காணாமல் (கண்களித்யாதகோ)

ஹார ஹீர வைஜயந்தி
தோர முத்தின ஹார பதக
தேரனேறி பீதிலி பருவ
ஸ்ரீரங்க விட்டல ராயன நோடதா(கண்களித்யாதகோ)


வைரம் மற்றும் வைஜயந்தியினாலான மாலை
முத்து இழைத்த பதக்கத்துடன்
தேரில் ஏறி வீதியில் பவனி வரும்
ஸ்ரீரங்க விட்டலனை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

***

பாடலில் வரும் விரஜா நதியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

சொர்க்கத்தில் இருக்கும் நதியின் பெயர் விரஜா நதி என்று சொல்லப்படுகிறது. அந்த நதியில் ஒரு முறை முங்கி எழுந்ததும், ஆத்மாவிற்கு சம்சார பந்தங்கள் அனைத்தும் அறுந்து, அதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் போய்விடுமாம்.

***

இந்த பாடலை நம் பீமண்ணர் மிகமிக பக்தியுடன் பாடியுள்ளதை கேட்போம்.



***

Wednesday, April 20, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா
தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)

பாடல் மற்றும் அதன் விளக்கத்திற்கு கண்ணன் பாடல்களுக்கு செல்லவும்.

http://kannansongs.blogspot.com/2011/04/blog-post_18.html

Thursday, April 14, 2011

ஸ்ரீ ராகவேந்திரைக் குறித்த இன்னொரு பாடல்.

ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்து ஹரிதாஸர்கள் பற்பல பாடல்கள் பாடியுள்ளனர். இன்று பார்க்கப் போகும் இந்த பாடலை இயற்றிவர் ஸ்ரீ அபினவ ஜனார்த்தன தாஸர். கிபி1727ம் ஆண்டு அவதரித்த இவர், ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதில் பல ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்தே ஆகும். இந்த தளத்தில் ஸ்ரீ அபினவ ஜனார்த்தன தாஸரின் முதல் பாடல் இதுவாகும்.


***


ஸ்ரீ ராகவேந்திரருக்கு அறிமுகம் தேவையில்லை. துங்கபத்ரா நதிக்கரையில், மந்திராலயத்தில் சமாதி அடைந்திருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர், பற்பல பேர்களுக்கு கற்பகவிருட்சமாய், காமதேனுவாய், கேட்கும் வரங்களை தவறாது கொடுக்கும் வள்ளலாய் இருக்கிறார்.


இப்போது பாடல்.


***


துங்கா தீரதி நிந்த சுயதிவரன் யாரே பேளம்மையா

சங்கீதப்ரிய மங்கள சுகுணித ரங்க முனிபுலோத்துங்கா கணம்மா

துங்கா நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த முனி யாருன்னு சொல்லம்மா இசையைப் பிடித்தவராய், மங்களகரமாய் நல்ல குணத்துடன் இருக்கும் அந்த முனிவர் யாருன்னு சொல்லம்மா

செல்வ சுமுக பனியல்லி திலக நாமகளு பேளம்மையா

ஜலஜ மணிய கொரளலு துளசி மாலேகளு பேளம்மையா

சுலலித கமண்டல தண்டவன்ன தரிதிஹனே பேளம்மையா

குலஹிரண்யகனல்லி ஜனிசித ப்ரஹ்லாதனு தானில்லிதனம்மா (துங்கா)

அமைதி தவழும் முகத்தில், நெற்றியில் திலகம் இருக்கும் கலகலக்கும் மணிகளையுடைய துளசி மாலைகள் கழுத்தில் இருக்கும் கைகளில் கமண்டலமும், தண்டமும் ஏற்றிருப்பார் ஹிரண்யாசுரனின் குலத்தில் உதித்த பிரகலாதனின் அவதாரமே இவர் (துங்கா)

சுந்தரசரணரவிந்த சுபகுதியலிந்தா பேளம்மையா

வந்திஸி ஸ்துதிசுவ பூசுரரூ பலுவிருந்தா பேளம்மையா

ஜண்ட தளங்க்ரிதியிந்த ஷோபிசுவ ஆனந்தா பேளம்மையா

ஹிந்தே வியாசமுனியெந்தெணிசித கர்மந்திகளரசனதிந்த ரஹிதனே (துங்கா)

அவருடைய அழகான பாதங்களில் மிகவும் பக்தியுடன் வணங்கி, போற்றி, பாடும் மக்கள் அனைவருக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆனந்தத்தைத் தரும் இவர் முன்னர் வியாச பகவானாய் அவதரித்தவரே, என்று சொல்லம்மா (துங்கா)

அபினவ ஜனார்த்தன விட்டலன தியானிசுவ பேளம்மையா

அபிவந்திபரிகே அகிலார்த்தவ சல்லிசுவ பேளம்மையா

நபமணி யந்ததி பூமியல்லிராஜிசுவ பேளம்மையா

சுபகுண நிதி ஸ்ரீ ராகவேந்திரயதி அபுஜபவண்டதல்லி ப்ரபலகணம்மா (துங்கா)

அபினவ ஜனார்த்தன விட்டலனை தியானிப்பவர்களுக்கு பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் இருக்கும் சந்தோஷங்கள் அனைத்தும் கிடைக்கும் இந்த பூமியை ஆளும் நற்குணங்களையுடைய ஸ்ரீ ராகவேந்திரர், உலகம் முழுக்க பிரபலமானவரென்று சொல்லம்மா (துங்கா)

***

இந்த பாடலை ஆழ்ந்த பக்தியுடன் பாடும் நம்ம பீமண்ணர்.

***

Sunday, April 10, 2011

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது,

எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது -

இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்?

டக்குன்னு சொல்லிடுவீங்க.

சிறுவனாக மாயைகளை காட்டுவதும்; பின்னாளில் (கீதையை உபதேசித்து) மாயைகளை நீக்குவதும் கிருஷ்ண அவதாரத்தில்தானே. இதைத்தான் நம்ம விசாகா ஹரி எப்படி அருமையா சொல்றாங்கன்னு ஒரு தடவை கேட்டுடுங்க.

http://www.youtube.com/watch?v=eHA9oKVxkFw

நிற்க.

இந்த மாயாஜாலங்களை கிருஷ்ண அவதாரத்துக்கு ரிசர்வ் செய்து வைத்திருந்தாலும், ரொம்ப நாளைக்கு முன், ராமாவதாரத்திலேயே நமக்கு ஒரு ச்சின்ன முன்னோட்டம் கிடைத்து விடுகிறது.

அட, அது எப்படி?

அதுதான் இன்றைய பாடல். ஸ்ரீ புரந்தரதாசருடையது.

***

ராம ராவண யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திரஜித் மரணமடைந்த தருணத்திற்கு வருவோம். ராவணன் தன்னுடைய core சேனையை யுத்தத்துக்கு அனுப்புகிறான். இந்த சேனையில் இருக்கும் ஒவ்வொருவரும் ராவணன் அளவுக்கு பலம் வாய்ந்தவர்கள். இந்த சேனை நகர்ந்து வரும்போது தூசி பறந்து அந்த இடத்தையே மறைத்ததாம். ஈட்டிகளின் உரசல்கள் காட்டுத்தீ அளவுக்கு தீயை வளர்த்ததாம்.

எண்ணிக்கையில் மிகவும் அதிகமான இந்த ராவண சேனையைக் கண்டு, வானர சேனைகள் பயந்து ஓடின. சுக்ரீவன், நீலன், அங்கதன் ஆகியோர் வானர சேனையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அவர்களால் முடியவில்லை. மெல்ல மெல்ல ராவண சேனை, வானரர்களை அழித்துக் கொண்டே வந்து, ராமனையும் நெருங்கியது.

தனியொருவனாக ராமன், மிகப்பெரிய ராவண சேனையை எப்படி எதிர்கொள்வான்? அவனால் முடியுமா, முடியாதா என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, ராமன் யுத்தத்தை துவக்குகிறான். ராமன் விட்ட அம்புகள் மழை போல் தொடர்ந்து சென்று ராவண சேனைகளை அழிக்க ஆரம்பித்தன. எப்போது அம்பை எடுக்கிறான், எப்போது வில்லில் தொடுக்கிறான், எப்போது அதை விடுவிக்கிறான் என்பதே தெரியாமல் மிகமிக வேகமாக யுத்தம் செய்கிறான் ராமன்.

ஆனாலும், ராவண சேனைகள் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் வேறொரு உபாயம் செய்தே அவர்களை முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இப்போதுதான், மேலே சொன்ன அந்த 'முன்னோட்டம்' வருகிறது.

பூம்.




திடீரென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும், மற்றவர்களுக்கு ராமனைப் போலவே காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தால் ராமன். அங்கே ராமன். யாரைப் பார்த்தாலும் ராமனைப் போலவே தெரிகிறது. யுத்தகளத்தில் இடமே இல்லாமல், எல்லா இடத்திலும் ராமன். திடீரென்று எப்படி இவ்வளவு ராமன் வந்தான் என்று அனைவருக்கும் குழப்பம்.

ராவண சேனைகளுக்கு பயங்கர கோபம். ராமனாக தெரிபவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். அதாவது தங்கள் சேனையிலிருப்பவர்களையே கொன்றனர். இப்படியே எதிரிகள் தங்களை தாங்களே கொன்று அழிய ஆரம்பித்தனர்.

இந்தப் பக்கம், வானரர்கள். ஒரே ஒரு ராமன் இருந்தாலே அவனுக்கு சேவைகள் செய்து மகிழ்பவர்கள். இப்போது பற்பல ராமன்கள். ஆனந்தம் தாங்கவில்லை அவர்களுக்கு. ஆடுகின்றனர். பாடுகின்றனர். தலைகால் புரியவில்லை. இப்படி அனைத்து ராவண சேனையும் அழிந்தபிறகு, ராமன் இந்த மாயையை நிறுத்தி, மறுபடி ஒருவனாக நின்றான். ராமாயணத்தில் வரும் இந்த யுத்தக் காட்சியை, ஸ்ரீ புரந்தரதாசர் அப்படியே தன எளிமையான கன்னடத்தில் பாடியிருக்கிறார்.





***

அல்லி நோடலு ராம இல்லி நோடலு ராம

எல்லெல்லி நோடிதரல்லி ஸ்ரீ ராம

அங்கு பார்த்தாலும் ராமன் இங்கு பார்த்தாலும் ராமன்

எங்கெங்கு பார்த்தாலும் அங்கு ஸ்ரீ ராமன்

ராவணன மூலபல கண்டு கபிசேனே

ஆவாகலே பெதரி ஓடிதவு

ஈவேளே நரனாகி இரபார தென்தெணிசி

தேவ ராமச்சந்திர ஜகவெல்ல தானாத (அல்லி)

ராவணனின் முக்கிய படையினரின் பலத்தைப் பார்த்த வானர சேனைகள் உடனடியாக அடித்துப் பிடித்து ஓடியது இனிமேல் (சாதாரண) மனிதனாக இருக்கக்கூடாது என்றெண்ணிய ராமன் உலகம் முழுக்க அவனே வியாபித்தான். (பற்பல அவதாரங்கள் எடுத்தான்).

அவனிகே இவ ராம இவனிகே அவ ராம

அவனியோள்ளுபரி ரூப உண்டே

லவ மாத்ரதி அசுர துருவலெல்லரு

அவரவர் ஹோடெதாடி ஹதராகி ஹோதரு (அல்லி)

அவனுக்கு இவன் ராமன் இவனுக்கு அவன் ராமன் உலகத்தில் ராமனைத் தவிர இன்னொரு ரூபமும் உண்டோ இது நடந்த உடனே, அசுரர்களின் பக்கத்தில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு வீழ ஆரம்பித்தனர்

ஹனுமதாதி சாது ஜனரு அப்பி கொண்டு

குணிகுனி தாடிதரு ஹருஷ திந்தா

க்ஷண தல்லி புரந்தர விட்டல ராயனு

கொனேகொனேயனு தானொப்பனாகி நிந்தா (அல்லி)


அனுமன் முதலாத வானர சேனைகள் (ஒருவரையொருவர்) கட்டிப் பிடித்துக் கொண்டு குதித்து குதித்து ஆடினர் சந்தோஷத்துடன் உடனே (ஒரு நிமிடத்தில்) புரந்தர விட்டலனான ஸ்ரீ ராமன் தன் அனைத்து ரூபங்களையும் மறைத்துக் கொண்டு ஒருவனாகி நின்றான்.


***


Dr.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தன் அருமையான குரலில் இந்த பாடலை பாடியிருக்கிறார்.




**



Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள் பாடியது.




***


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!


***


Wednesday, April 6, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 2 of 2

சென்ற பதிவில் கேசவன் முதலான 24 நாமங்களில், முதல் 12 மட்டும் பார்த்தோம். இந்த பதிவில் மீதம் 12 ஐ பார்ப்போம். அதாவது:


பார்த்தது:


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன


திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர


பார்க்கப் போவது:


சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா


நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


***


இந்த பாடலை கேட்பதற்கு இங்கே செல்லவும்:


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana


இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


அந்த நாராயணனின் அருமை பெருமைகளை எழுதுவதால் என்ன பயன்? இதற்கு ஸ்ரீ கனகதாசர் அருமையாக ஒரு பயனை சொல்கிறார், இந்த பாடலின் கடைசி பத்தியில்.


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


கூப்பிட்டு கொடுப்பான் என்று சொல்கிறார். இதைவிட பேரானந்தம் வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்ன?


***


இப்போ பாடலின் தொடர்ச்சி:


பங்கஜாக்‌ஷ நேனு என்னா மந்த புத்தியன்னு பிடிசி கிங்கரன்னா மாடிகொள்ளோ சங்கர்ஷணா!


தாமரைக் கண்ணனே, என் மந்த புத்தியை நீக்கி என்னை உன் வேலையாளாக வைத்துக்கொள் சங்கர்ஷணா.


யேசு ஜன்ம பந்தரேனு தாசனல்லவேனொ நானு காசி மாடதிரு இன்னு வாசுதேவனே!


எவ்வளவு ஜென்மம் எடுத்தாலென்ன, நான் உன் வேலையாள்தானே, என்னை காயப்படுத்தாதே வாசுதேவனே.


புத்தி சூன்யனாகி என்ன பத்த கார்ய குஹகமனவ தித்தி ஹ்ருதய சுத்தி மாடோ ப்ரத்யும்னனே!


ஞானமில்லாமல் செய்த கெட்ட செயல்களினால், என் மனதில் கெட்ட எண்ணங்கள் வந்துவிட்டது. அதை சுத்தப்படுத்து பிரத்யும்னனே.


ஜனனிஜனக நீனே எந்து நெனெவேனய்யா தீனபந்து எனகே முக்தி பாலிசய்யா அனிருத்தனே!


என் தாயே, தந்தையே, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவனே, எனக்கு முக்தியை கொடு அநிருத்தனே.


ஹருஷதிந்தா நின்ன நாமா ஸ்மரிசுவந்தே மாடு நேமா விரிசு சரணதல்லி புருஷோத்தமா!


தூய்மையான மனதுடனும், சந்தோஷத்துடனும் என்றும் உன் பெயரை ஜபித்து உன் காலடியில் நான் இருக்குமாறு செய்வாய் புருஷோத்தமா.


சாதுசங்க கொட்டு நின்ன பாதபஜனெயிட்டு என்ன பேதமாடி நோடதிரோ ஸ்ரீ அதோக்‌ஷஜா!


என்னை வேற்று மனிதராக நினைக்காமல், நல்ல மனிதர்களின் நட்பைத் தருவாய், உனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருவாய் அதோக்ஷஜனே.


சாரு சரண தோரி எனகே பாருகாணிசய்யா கொனேகே பார ஹகுதிருவே நினகே நாரசிம்ஹனே!


உன் காலடியை காட்டி எனக்கு, கடைசியில் முக்தியை கொடுப்பாய், உன்னையே நம்பியிருக்கிறேன் நாரசிம்ஹனே.


சஞ்சிதார்த்த பாபகளனு கிஞ்சிதாத பீடேகளனு முஞ்சிதவாகி களேது பொரெயோ ஸ்வாமி அச்சுதா!


சென்ற ஜென்மங்களில் சேர்ந்துவிட்ட பாவங்களையும், மீதமிருக்கும் கஷ்டங்களையும் களைந்து என்னை நீயே காப்பாற்ற வேண்டும் அச்சுதனே.


ஞான பக்தி கொட்டு நின்னா த்யானதல்லி இட்டு சதா ஹீனபுத்தி பிடிசு முன்ன ஸ்ரீ ஜனார்த்தனா!


ஞானத்தையும் பக்தியையும் கொடுத்து, உன்னைப் பற்றிய தியானத்திலேயே என்னை இருக்கச் செய்து, என் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை விலக்கிடுவாய் ஸ்ரீ ஜனார்தனா.


ஜபதபானுஷ்டான வில்லதே குபதாகமியாத என்ன க்ருபேயமாடி க்‌ஷமிசபேகு உபேந்திரனே!


ஜபங்கள், தபங்கள் எதுவும் செய்யாது, கெட்ட வழியில் சென்ற என்னை தயவு செய்து மன்னித்து அருளவேண்டும் ஸ்ரீ உபேந்த்ரனே.


மொரெய இடுவெனய்யா நினகே ஷரதி சயன சுபமதிய இரிசு பக்தனெந்து பரமபுருஷ ஸ்ரீ ஹரி!


பாற்கடலில் படுத்திருக்கும் பரமபுருஷனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன், என்னை உன் பக்தனென்று எண்ணிக் கொண்டு, எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பாய், ஸ்ரீ ஹரியே.


புட்டிசலேபேட இன்னு புட்டிசிதகே பாலிசென்னா இஷ்டு மாத்ர பேடிகொம்பே ஸ்ரீ கிருஷ்ணனே!


என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், எனக்கு இன்னொரு ஜென்மமே வேண்டாம்; இந்த ஜென்மம் கொடுத்துவிட்டாய், அதனால் நீயே காப்பாற்றியும்விடு, ஸ்ரீ கிருஷ்ணனே.


சத்யவாத நாமகளனு நித்யதல்லி பதிசுவவரா அர்தியிந்தா சலஹுவனு கர்த்ரு கேசவா!


(மேற்கூறிய) கடவுளின் பெயர்களை யார் சொல்கிறார்களோ, சந்தேகமில்லாமல் அவர்களை காப்பான் ஸ்ரீ கேசவன்.


மரேயதலே ஹரியநாம பரெது ஓடி கேளிதவகே கரெது முக்தி கொடுவா நெலெ ஆதிகேசவா!


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


***


Tuesday, April 5, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 1 of 2


விஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தில் 24 நாமங்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. அவை என்ன?


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன



திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர் ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர



சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா



நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


எந்த காரியத்தை செய்வதானாலும், மனத்தூய்மையுடன் கடவுளை வணங்கி செய்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பது நம்பிக்கை. அதற்காகவே பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவைகளை துவக்கும்போது 'ஆசமனம்' செய்யவேண்டுமென்றும், அப்படி செய்யும்போது மேற்கூறிய கடவுளின் 24 நாமாக்களையும் சொல்ல வேண்டும் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள். பொருள் அறிந்தோ அறியாமலோ இந்த நாமாக்களை சொல்வதால் உள்ளே இருக்கும் பாவங்கள் போகும், மோட்சம் கிட்டும் என்பது அஜாமிளன் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நாமாக்களின் மகிமையை நமக்கு தெரிவிக்க வேண்டுமென்று ஸ்ரீ கனகதாஸர் ஒரு பெரிய்ய்ய பாடலை பாடியிருக்கிறார். ஒவ்வொரு நாமாவுக்கும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள், இரண்டு வரி. வேண்டுகோள்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் - கிரைண்டர், மிக்சி இதெல்லாம் கிடையாது. அவன் கருணைப் பார்வை மட்டுமே.


மிகப் பெரிய பாடல் ஆகையால், இரண்டு பகுதியா பிரிச்சி போடறேன். இதற்கு சரியான காணொளியும் கிடைக்கலை. வெறும் ஒலிதான். அதை இரண்டு பதிவிலும் இணைத்திருக்கிறேன். கேட்டு ரசிங்க. வித்யாபூஷணரின் குரலில் இந்த மிக மிக அழகான பாடலை கேட்டு மகிழுங்கள்.



***


ஈச நின்ன சரண பஜனே ஆசேயிந்தா மாடிதேனோ தோஷராசி நாச மாடோ ஸ்ரீச கேசவ!

ஈசனே உன் பாதத்தை ஆசையுடன் வணங்கி பஜனை செய்தேன் நான் செய்த பாவத்தை நாசம் செய்வாம் ஸ்ரீ கேசவனே.

சரணு ஹொக்கேனய்யா என்ன மரண சமயதல்லி நின்ன சரண ஸ்மரணே கருணிசய்யா நாராயணா!


உன் பாதத்தை விடமாட்டேன், என்னை மரண சமயத்தில் உந்தன் சரணத்தை நினைக்கும்படி வைப்பாய் நாராயணா.

சோதிசென்ன பவத கலுஷ போதிசய்யா ஞானவெனகே பாதிசுவ யமன பாதே பிடிசு மாதவா!


வாழ்க்கையின் கஷ்டங்களை போக்கி, ஞானத்தை கொடுப்பாய் யமனால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுவிப்பாய் மாதவா.


ஹிந்தனேக யோனிகளல்லி பந்து பந்து நொந்தேனய்யா இந்து பவத பந்த பிடிசோ தந்தே கோவிந்தா!


நிறைய பிறவிகள் எடுத்து வந்து நொந்து போயுள்ளேன் இந்த பந்த பாசத்திலிருந்து என்னை விடுவிப்பாய் கோவிந்தா.


ப்ரஷ்டனெனிச பேட கிருஷ்ணா இஷ்டு மாத்ர பேடிகொம்பே சிஷ்டரொடனே இஷ்டு கஷ்ட பிடிசு விஷ்ணுவே!

சுயநலவாதி என்றெண்ணாமல் இது மாத்திரம் செய்துவிடு நல்லவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்காதே விஷ்ணுவே.


மதனனய்யா நின்ன மஹிமே வதனதல்லி நுடியுவந்தே ஹ்ருதயதொளகே ஹுதுகிசய்யா மதுசூதனா!

மன்மதனின் தந்தையே, உன் மகிமையை என் வாயால் எப்போதும் பாடுவதற்கு இதயத்திலே (உன் மகிமையை) வைத்திருப்பாய் மதுசூதனா.


கவிதுகொண்டு இருவ பாப சவிது போகுவந்தே மாடோ ஜவன பாதேயன்னு பிடிசோ ஸ்ரீ த்ரிவிக்ரம!

என்னை சூழ்ந்திருக்கும் பாபத்தை ஓடஓட விரட்டுவாய் யமனின் செயல் தரும் கஷ்டத்திலிருந்து என்னை காப்பாய் திரிவிக்ரமா.


காமஜனக நின்ன நாமா ப்ரேமதிந்தா பாடுவந்தா நேமவெனகே பாலிசய்யா ஸ்வாமி வாமனா!


மன்மதனின் தந்தையே உன் நாமத்தை ப்ரேமத்துடன் பாடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ள அருள்வாய் வாமனா.


மொதலு நின்ன பாத பூஜே ஒதகுவந்தே மாடோ என்ன ஹ்ருதயல்லி சதன மாடோ முததி ஸ்ரீதரா!

காலையில் (முதல்வேலையாக) உன் பாதபூஜை செய்ய அருள்வாய் என் இதயத்தில் வாசம் செய்வாய் ஸ்ரீதரா.


ஹுசியனாடி ஹொட்டே ஹொரெவ விஷயதல்லி ரசிகனெந்து ஹுசிகே ஹாகதிரோ என்ன ரிஷிகேசனே!

வெறும் பொய்களைச் சொல்லி (சம்பாதித்து) வயிற்றை ரொப்பும் மனிதனென்று எண்ணி என்னை புறக்கணித்துவிடாதே ரிஷிகேசனே.


பித்து பவதனேக ஜனும பத்தனாகி கலுஷதிந்தா கெத்துபோப புத்தி தோரோ பத்மனாபனே!


எல்லா ஜென்மங்களிலும் பாவங்களையே செய்து வந்திருக்கிறேன் - இதை வெல்லும் புத்தியைக் கொடு பத்மநாபனே.


காமக்ரோத பிடிசி நின்ன நாம ஜிஹ்வெயொளகே நுடிசோ ஸ்ரீ மஹானுபாவனாத தாமோதரா!


காம, க்ரோதங்களிலிருந்து விடுவித்து, உன் பெயரையே என் நாவில் இருக்கச் செய்வாய் எல்லோருக்கும் தலைவனான தாமோதரனே.


*****


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


Thursday, March 31, 2011

ஆண்டவன் காப்பாற்றுவான், இதில் சந்தேகமேயில்லை

இந்த உலகத்தில் எல்லாரும் சந்தோஷமாயிருக்காங்க. என்னை மட்டும் ஏன் இந்த ஆண்டவன் இப்படி படுத்தறான்? ஆண்டவன்னு ஒருவன் இருக்கானா இல்லையான்னே தெரியலியே? - இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கலாம். வாழ்க்கையில் மேல் விரக்தி அடைந்து இப்படி புலம்புபவர்களுக்காக ஸ்ரீ கனகதாஸர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்று இன்று பார்ப்போம். முன்னாடி பார்த்த நிறைய பாடல்களில் - கடவுள் கஜேந்திர மோட்சம் கொடுத்தான், திரௌபதிக்கு சேலை கொடுத்தான் - இப்படியெல்லாம் உதாரணம் காட்டி, எனக்கும் தயை காட்டு என்று தாஸர்கள் வேண்டுவதை பார்த்தோம். ஆனால் இந்த பாடலில், புராண உதாரணங்கள் எதுவுமில்லாமல், எல்லாம் சமகாலத்தில் நடக்கும் சாதாரண விஷயங்களையே சொல்லி, துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு தைரியம் கொடுக்கிறார் கனகதாஸர். மனதில் உறுதி வேண்டும், தைரியத்தை இழக்காதே, கண்டிப்பாக ஆண்டவன் உனக்கு கைகொடுப்பான் என்று கூறி தாஸர் பாடும் பாடல்தான் ‘தள்ளனிசதிரு கண்ட்யா’. *** திருவிளையாடல்(?) படத்தில் ஒரு காட்சி வரும். உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கிவிட்டேன் என்று சிவபெருமான் கூறும்போது, பார்வதிதேவி தான் மறைத்து வைத்திருந்த ஒரு டப்பாவில் உள்ள ஒரு எறும்புக்கு நீங்கள் உணவளிக்க மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே என்று கூறுவார். அப்போது சிவன், அதைத் திறந்து பார் எனவும், அங்கே பார்த்தால், அந்த எறும்புக்கு அருகில் அதற்கான உணவு இருக்கும். அகில உலகத்திற்கும் படியளப்பவன் அந்த பரம்பொருளே என்று கூறும் அந்த காட்சியின் சாரத்தையே ஸ்ரீகனகதாஸரும் இந்த பாடலில் பாடுகிறார். *** தள்ளனிசதிரு கண்ட்யா தாளு மனவே எல்லரனு சலஹுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) சஞ்சலப்படாமல் பொறுமையுடன் இருப்பாய் மனமே எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) பெட்டதா துதியல்லி ஹுட்டிருவ விருக்ஷக்கே கட்டேயனு கட்டி நீர் எரேதவரு யாரு புட்டிசித சுவாமிதான் ஹோடேகாரனாகிரலு கெட்யாகி சலகுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) மலைமேல் வளர்ந்திருக்கும் மரங்களுக்கெல்லாம் (அங்கேயே) குட்டையை கட்டி நீர் இறைத்தவர் எவரோ பிறக்கவைத்த கடவுளே காப்பாற்றுபவனாகவும் இருப்பதால் கண்டிப்பாக காப்பாற்றுவான் இதில் சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) அடவியொளகாடுவா மிருக பக்ஷி களிகெல்லா அடிகடிகே ஆஹாரா இட்டவரு யாரு படேத ஜனனிய தெரதி சுவாமி ஹோடேகீடாகி பிடதே ரட்சிபநிதகே சந்தேக பேடா. அடர்ந்த காடுகளில் உலவும் மிருக, பறவைகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆகாரம் கொடுப்பவர் யாரோ இந்த உலகத்தை படைத்த கடவுளே காப்பாற்றுவான் கைவிடமாட்டான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) கல்லொளகே ஹுட்டிருவ க்ருமிகீட களிகெல்லா அல்லல்லி ஆஹார இத்தவரு யாரு புல்லலோசன காகிநெலெ ஆதிகேசவனு எல்லரனு சலஹனுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) கல்லுக்குள் இருக்கும் தேரைக்கெல்லாம் அங்கங்கேயே உணவு கொடுப்பவர் யாரோ மலரைப் போலவும், ஒளியுடைய கண்களையுடவனுமாகிய காகிநெலெ ஆதிகேசவன் எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) *** திருமதி. ஜெயவந்தி அவர்கள் பாடிய பாடல்: ஒரு கன்னட திரைப்படத்தில் வந்த இந்த பாடல்: *** பின்குறிப்பு: அப்போ கடவுளே எல்லாத்தையும் பாத்துப்பாரா, நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லையான்னு கேக்கப்படாது. பிரச்சினைகளில் இருந்து விடுபட மனித முயற்சியும் கண்டிப்பாக தேவை. அப்போதுதான் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். சித்தி மனித முயற்சி. அருள் தெய்வ அனுக்கிரகம். மனித முயற்சி முடியுமிடத்தில் தெய்வ அருள் செயல்படும். இந்த பழமொழிகளெல்லாம் தெரியும்தானே? ***

Tuesday, March 22, 2011

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்


தலைப்பை பார்த்ததும் பாட்டை டக்குன்னு பிடிச்சிருப்பீங்க. பற்பல பாடகர்களாலும், ஹரிஹரனாலும் (Colonial Cousins) பாடப்பட்டு, அனைவருக்கும் பிடித்த மிகவும் இனிமையான பாடல்தான் இது - கிருஷ்ணா நீ பேகனே பாரோ. இந்த பாடலை இயற்றிவர் ஸ்ரீ வியாஸராயர். இவருடைய புண்ணிய தினம் 3/23 அன்று வருவதையொட்டி, இந்த பதிவும் பாடலும் இன்று.

***


ஸ்ரீ வியாஸராயர் 1460ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் யதிராஜா. 7 வயதில் உபநயனம் செய்வித்து, பிரம்மண்ய தீர்த்தர் என்ற குருவிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார். இவருடைய திறமைகளை கண்ட பிரம்மண்ய தீர்த்தர், வியாஸராயர் என்று பெயரிட்டு, சன்னியாசம் கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 16.பிறகு காஞ்சியிலும், முளபாகலிலும் ஸ்ரீபாதராயரிடம் வேத வேதாந்தங்களை கற்ற ஸ்ரீ வியாஸராயர், விஜயநகர பேரரசின் அரசர் சலுவ நரசிம்ம ராயரிடம் ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். அந்த அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ வியாஸராயர் திருப்பதிக்கு சென்று வேங்கடனின் திருக்கோயிலில் சுமார் 12 வருடங்கள் பாதுகாவலராகவும் சேவை செய்தார். விஜயநகர பேரரசில் அடுத்து வந்த ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரிடமும், ஸ்ரீ வியாஸராயர் ராஜகுருவாக இருந்தார்.

ஒரு முறை ஸ்ரீ வியாஸராயர், ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரை குஹு யோகம் என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றினார். அதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கிருஷ்ணதேவ ராயர், வியாஸராயருக்கு மிகவும் மரியாதை செலுத்தி, அவரை வணங்கி வந்தார்.

ஸ்ரீ வியாஸராயர், மத்வர் வழியில் வந்த மடாதிபதிகளில் முக்கியமானவர். அவர் பற்பல புத்தகங்கள், பாடல்கள் நமக்கு தந்துள்ளார். புரந்தரதாஸர், கனகதாஸர் முதலான தாஸர்களுக்கும், (கும்பகோணத்தில் சமாதியடைந்த) ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தருக்கும் குருவாக இருந்தவர். தென்னிந்தியா முழுக்க சுமார் 700 ஆஞ்சனேயர் கோயில்களை ஸ்தாபித்து பக்தியை பரப்பியவர்.


பிரகலாதனின் அவதாரமாக கருதப்பட்ட ஸ்ரீ வியாஸராயர், 1539ம் ஆண்டு ஹம்பிக்கு அருகே துங்கபத்ரா நதிக்கரையோரம் சமாதியடைந்தார்.

***

கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் ராஜகுருவாக இருந்த ஸ்ரீ வியாஸராயரின் நினைவாக இன்றும் அந்த மடத்தின் தலைவருக்கு (தற்போதைய தலைவர் ஸ்ரீ வித்யா மனோகர தீர்த்தர்) தினமும் மாலையில் அரசவையில் இருப்பது போல் ராஜஅலங்காரம் செய்வித்து, அவர் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பூஜைகள் செய்விக்கப்படுகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள இந்த மடத்தில், அதன் (அப்போதைய) தலைவர் வந்திருக்கும் சமயங்களில் அந்த அற்புதமான காட்சியை, பூஜையை கண்டிருக்கும் பாக்கியத்தை அடைந்திருக்கிறேன்.

இப்போ பாடல்.

***

கிருஷ்ணா நீ பேகனே பாரோ
பேகனே பாரோ முகவன்னே தோரோ (கிருஷ்ணா)


கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)

காலா லந்திகே கெஜ்ஜே நீலத பாவோலி
நீலவர்ணத நாட்யா வாடுத பாரோ (கிருஷ்ணா)

கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)

உடியல்லி ஊடுகெஜ்ஜே பெரளல்லி உங்குர
கொரளோளு ஹாகித வைஜயந்தி மாலே (கிருஷ்ணா)

இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)

காசி பீதாம்பர கையல்லி கொளலூ
பூசித ஸ்ரீகந்த மையொள கிரலு (கிருஷ்ணா)

பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத்தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)

தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)

***

கண்ணன் பாடல்களில் இந்த பதிவை பாத்துடுங்க. KRSன் அழகிய வர்ணனைகளுடன், பல பக்தர்களின் குரலில் இந்த பாடலும் பதிவு செய்யப்பட்டிருக்கு.
http://kannansongs.blogspot.com/2008/06/100-krs_26.html

***

யூட்யூபில் இந்த பாடலுக்கு ஏகப்பட்ட காணொளிகள் இருந்தாலும், இரண்டை மட்டும் இங்கே பாத்துடுவோம்.

திரு.யேசுதாஸ் பாடியது



திருமதி. சித்ரா பாடியது



***

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

***

Monday, March 14, 2011

அனைத்திற்கும் தலைவன் யார்?


மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மாபெரும் வெற்றியடைந்தாலும், தர்மருக்கு அவ்வளவாக சந்தோஷமில்லை. அவரிடம் பதில் தெரியாத பல கேள்விகள் இருந்தன. அப்படி என்ன கேள்விகள்?

ஏன் இந்த யுத்தம் நடைபெற்றது?
தர்மம் என்றால் என்ன?
பாவ புண்ணியம் என்றால் என்ன?

இப்படி பற்பல கேள்விகள்.

தர்மரின் மனக்குழப்பத்தை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், அவரை அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் ஸ்ரீபீஷ்மரிடம் அழைத்துச் சென்றார். ஸ்ரீ பீஷ்மரே எல்லா சந்தேகங்களையும் தீர்க்க வல்லவர் என்றும் கூறுகிறார்.

இப்போது தர்மர் பீஷ்மரிடம் கேள்விகள் கேட்கிறார்.

கிமேகம் தைவதம் லோகே
கிம் வாப்யேகம் பராயணம் !
ஸ்துவம்த:கம் கமர்சந்த:
ப்ராப்னுயுர் மானவா சுபம் !!

கோ தர்ம: சர்வதர்மாணாம்
பவத: பரமோமத:!
கிம் ஜபன் முச்சதே ஜந்துர்
ஜன்ம சம்சார பந்தனாத்!!


1. உத்தமமான கடவுள் யார்?
2. யாரிடம் போய் நாம் அனைவரும் சரணமடையலாம்?
3. யாரை புகழ்ந்து பாடினால், நாம் அமைதியையும், வளர்ச்சியையும் (முக்தி) அடையலாம்?
4. யாரை வணங்குவதால், நமக்கு மோட்சம் கிட்டும்?
5. மிகவும் உயர்ந்த தர்மமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
6. யார் பெயரை உச்சரிப்பதன் மூலம், ஜீவராசிகள் மறுபிறப்பு அடையாமல் இருப்பார்கள்?

இவைகளுக்கு பதில் சொல்லும் பீஷ்மர், பகவான் விஷ்ணுவின் அருமை பெருமைகளை சொல்லும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளுகிறார்.

ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!


அனைவரிலும் உத்தமமானவன் அந்த புருஷோத்தமன். அவனை வணங்குவதாலேயே மறுபிறப்பு கிட்டாமல், மோட்சம் கிட்டும் என்று சொல்கிறார்.

***



இப்படி சர்வோத்தமனான அந்த நாராயணனே, எங்கும் வியாபித்திருக்கிறான். அவனாலேயே அனைத்தும் இயங்குகின்றன. இந்த கோள்கள், நட்சத்திரங்கள், சூரிய சந்திரர்கள் முதற்கொண்டு அனைத்திலும் இருப்பது அவனே.

இந்த விளக்கத்தையே ஸ்ரீ புரந்தரதாஸர் இந்த அற்புதமான பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.

இனி பாடல்.

***

சகல க்ரஹபல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வரக்ஷா (சகல)

அனைத்து கிரகங்களின் பலன்களும் நீயே, தாமரை போல் கண்களை உடையவனே,
எல்லா இடத்திலும் இருந்து, இந்த உலகத்தை கட்டிக்காப்பவனே (சகல)

ரவிசந்திர புத நீனே ராஹு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவராத்ரியு நீனே நவவிதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)

சூர்ய, சந்திர, புதனும் நீயே, ராகு கேதுவும் நீயே
வியாழன், சனி மற்றும் வெள்ளியும் நீயே
பகலும் இரவும் நீயே, ஒன்பது விதானங்களும் நீயே++
நோய்களை தீர்க்கும் மருத்துவனும் நீயே, மருந்தும் நீயே (சகல)

பக்ஷமாசவு நீனே பர்வகாலவு நீனே
நக்ஷத்ர யோக கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்த நீ
பக்ஷிவாகன லோக ரக்ஷகனு நீனே (சகல)


(சுக்ல & கிருஷ்ண) பட்சமும் நீயே, மாதங்கள், பர்வ காலங்கள் நீயே
நட்சத்திர, யோக, கரணங்களும் நீயே
திரௌபதியின் மானத்தை குறைவில்லாத ஆடையளித்து காப்பாற்றிய நீ
கருட வாகனத்தில் வந்து உலகத்தை காப்பாற்றுபவனும் நீயே (சகல)

ருது வாசர நீனே ப்ருதிவிகாதியு நீனே
க்ரது ஹோம யஞ்ய சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடைய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகதா அப்ரதிம மஹிம நீனே (சகல)

(ஆறு) காலமும், வருடங்களும், வருடப்பிறப்பும் நீயே
ஹோம, யாகங்களினால் அடையும் முக்தியும் நீயே
யாராலும் தோற்கடிக்க முடியாத என் தலைவன் புரந்தர விட்டலனே,
நீ வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே (சகல)


***

++ஒன்பது விதானங்கள் என்றால் என்ன?

அவை 6 வேதாங்கங்கள் மற்றும்
7. மீமாம்சம்
8. நியாய
9. சாங்க்யம்

ஆகும்.

இப்போ 6 வேதாங்கங்கள் அப்படின்னா என்ன?

1. சிக்‌ஷா
2. கல்பா
3. வ்யாகரணம்
4. நிருக்தா
5. சந்தஸ்
6. ஜ்யோதிஷ

வேதங்களை படித்து அறிந்து கொள்ளுவதற்கு முன், இந்த ஆறு வேதாங்கங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு விதி உள்ளதாம்.

***

திருமதி.விசாகா ஹரி, ஒரு கதையின் நடுவில் பாடிய இந்த பாடல்.



***

யூட்யூபில் சிக்கிய இந்த பாடலின் இன்னொரு காணொளி.



***

Wednesday, March 9, 2011

உடுப்பியில் பாடப்பட்ட இன்னொரு அற்புதமான பாடல்.




சிலர் தங்கள் குறைகளை தாய் தந்தையரிடம் சொல்கின்றனர்; சிலர் மனைவி, மக்களிடம்; மற்றும் சிலர் நண்பர்களிடம். இவர்கள் யாரிடத்திலும் சொல்ல முடியாத குறைகளை - ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை அறிந்தவர்கள் - அவரிடமே சொல்கின்றனர்.

ஸ்ரீ ராகவேந்திரரின் புகழ்பெற்ற ஸ்லோகமான

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச !
பஜதாம் கல்பவ்ருக்‌ஷாய நமதாம் காமதேனவே !!

சொல்வது என்னவென்றால்,

ராகவேந்திரரை வழிபடுங்கள், அவரே சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுபவர். அவரை பஜிப்பவர்களுக்கு கல்பவிருட்சம் போலவும், நினைப்பவர்களுக்கு காமதேனுவைப் போலவும் அருளை வாரி வழங்குவார்.

***

ஸ்ரீ ராகவேந்திரர், மத்வ மதத்தில் வந்த ஒரு பெரிய மகான். 1595ல் புவனகிரியில் பிறந்து, திருமணம் செய்து பிறகு சன்னியாசம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். பல்வேறு மதத்தலைவர்களை வாதத்தில் வென்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ள ஸ்ரீ ராகவேந்திரர், மந்திராலயத்தில் சமாதியடைந்தவர்.

இவரது வரலாறை தெரிந்துகொள்ள தமிழ்ஹிந்துவில் வந்த இந்த பதிவை பார்த்துவிடவும். (நான் மைனஸ் ஓட்டு போட எண்ணிய) இந்த பதிவில் மறுமொழிகளில் நல்ல குறிப்புகளும், விவாதங்களும் உண்டு.

ஒரு முறை ஸ்ரீ ராகவேந்திரர், உடுப்பி கிருஷ்ணனை தரிசனம் செய்ய வந்தபோது, இந்த பாடலை - இந்து எனகே கோவிந்தா - பாடியதாக சொல்கின்றனர். இதை அவர் பாடவில்லை என்று ஒரு “சர்ச்சை”யும் உண்டு. ஆனாலும், நம்ம உடுப்பி கிருஷ்ணனை வணங்கி பாடப்படும் இந்த அழகான பாடலை, ஸ்ரீ ராகவேந்திரரே இயற்றி, பாடியதாக எண்ணி, அதன் பொருளோடு பாடி, மகிழ்வோம் வாருங்கள்.

***

இன்னொரு முக்கிய குறிப்பு:

ஸ்ரீ ராகவேந்திரரின் ஜன்ம தினம் மற்றும் அவர் பீடாதிபதி ஆன நாள் இரண்டும் இந்த வாரம் வருவதையொட்டி, அவர் மடம் இருக்குமிடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு கர்நாடக மாநிலம், ஹொஸ்பேட்டில், நடைபெறும் நிகழ்ச்சியை தினந்தோறும் (சென்ற வாரயிறுதி முதல் அடுத்த வாரயிறுதி வரை 3/5 - 3/12) http://saptaaha.com தளத்தில் நேரடி ஒளிபரப்பும் நடைபெறுகிறது.

இப்போது பாடல்.

***



இந்து எனகே கோவிந்தா
நின்னய பாதார விந்தவ தோரோ முகுந்தனே (இந்து)

இன்று எனக்கு கோவிந்தா
உன் பாதாரவிந்தங்களை காட்டு முகுந்தனே (இந்து)

சுந்தர வதனனே நந்தகோபிய கந்தா
மந்தரோத்தாரா ஆனந்தா இந்திரா ரமணா (இந்து)

அழகான முகத்தோனே, இடையர்குல மகனே (வாரிசே)
மந்தார மலையை தூக்கியவனே, லட்சுமியின் தலைவனே (இந்து)

நொந்தேனய்யா பவபந்தனதொளு சிலுகி
முந்தே தாரி காணதே குந்திதே ஜகதொளு
கந்தனந்தெந்தென்ன குந்துகள எணிசதே
தந்தே காயோ கிருஷ்ணா கந்தர்ப்ப ஜனகனே (இந்து)

இந்த சம்சார சாகரத்தில் மூழ்கி நொந்து போனேன்
முன் செல்லும் வழி தெரியாமல் இந்த உலகத்தில் தவித்தேன்
என்னை குழந்தையாக பாவித்து, என் தவறுகளை எண்ணாமல்
தந்தையே, என்னை காப்பாற்று, மன்மதனின் தந்தையே (இந்து)

முதாதனதி பலு ஹேடிஜீவனனாகி
த்ருடபகுதியனு மாடலில்லவோ ஹரியே
நோடலில்லவோ நின்ன பாடலில்லவோ மஹிமே
காடிகார கிருஷ்ணா பேடிகொம்பேனோ நின்ன (இந்து)

மூடனான நான் மிகவும் கோழையான வாழ்வு வாழ்ந்து
உன்னிடத்தில் அசைக்கமுடியாத பக்தியை செய்யவில்லை
உன்னை பார்க்கவில்லை; உன் மகிமையை பாடவில்லை
தேரோட்டியான கிருஷ்ணனே; உன்னை வேண்டிக் கொள்கிறேன் (இந்து)

தாருணியொளு பலுபார ஜீவனனாகி
தாரி தப்பி நடதே சேரிதே குஜனர
ஆரு காயுவரில்லா சாரிதே நினகய்யா
தீர வேணுகோபாலா பாருகாணிசோ ஹரியே (இந்து)

இந்த உலகத்தில் (ஒன்றுமே செய்யாமல்) வாழ்ந்து வந்தேன்
தவறான வழியில் போய் தவறான மனிதர்களிடம் போய் சேர்ந்தேன்
என்னை காப்பாற்ற இப்போது யாருமில்லை; உன்னை வந்தடைந்தேன்
வேணுகோபாலனே, என்னை ரட்சிப்பாய் ஹரியே (இந்து)


****

இப்போ காணொளிகள்.

இந்த இரண்டு காணொளிகளும் திரைப்படங்களுக்காக பதிவு செய்யப்பட்டவையே. இரண்டிலும், இரண்டாவது சரணம் மிஸ்ஸிங்.

முதலாவதாக, P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியது



அடுத்து PBSக்கு போட்டி போட்டு, உணர்ச்சிபூர்வமாக பாடியவர் நம்ம S.ஜானகியம்மா.



***

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

***

Wednesday, March 2, 2011

ஒம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய..



மாக மாதம், கிருஷ்ண பட்ச சதுர்த்தசியான இன்று மஹா சிவராத்திரி. சிவபெருமானுக்கு உகந்த நாள். சிவத்தலங்களில், சிவன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாளாகும். சிவராத்திரியின் சிறப்புகளையும், சிவனைக் குறித்து பூஜைகள் செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து ஒரு நல்ல பதிவு இங்கே இருக்கிறது. படித்து விடவும்.

***

வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் புரந்தரதாஸர், கனகதாஸர் மற்றும் பிற தாஸர்கள் பாடிய பாடல்கள் (ஏறக்குறைய) அனைத்தும் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் லட்சுமிதேவியைக் குறித்து பாடியவையே ஆகும். ஆனாலும், ஸ்ரீருதரதேவரும் (சிவன்) அந்த சம்பிரதாயத்தின் தாரதம்யத்தில் (hierarchy) இருப்பதால், சில பாடல்கள் அவரைக் குறித்தும் பாடப்பட்டுள்ளன. மேலும், மஹா சிவராத்திரியை கொண்டாடும் மத்வர் மற்றும் தாஸர்கள் வழியில் வந்த வைணவர்கள், இன்று சிறப்பு பூஜைகளும் செய்து வழிபாடு செய்கின்றனர். ருத்ரதேவரைக் குறித்து மத்வர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ வியாஸராஜர் மற்றும் பலரும் பல்வேறு ஸ்தோத்திரங்களை அருளியுள்ளனர். அவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


***

இன்று நாம் பார்க்கப் போகும் இந்தப் பாடலை இயற்றியவர், ஸ்ரீ விஜயதாஸர். காலம் 1682-1755. புரந்தரதாஸரை தன் குருவாக ஏற்று, அவரைப் போலவே இனிமையாகவும் எளிமையாகவும் கன்னடத்தில் ஏகப்பட்ட பாடல்களை எழுதியவர். இவரது பாடல்களின் இறுதியில் ‘விஜயவிட்டலா’ என்ற பெயரைப் பொறித்து, அந்த பாடல்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர். இந்த விஜயதாஸர், ஈசனைக் குறித்து பாடிய பாடல் இதோ.

கைலாச வாசா கௌரீஸ ஈசா
தைல தாரேயந்தே மனசு கொடோ ஹரியல்லி சம்போ (கைலாச)


கைலாச வாசனே கௌரியின் தலைவனே ஈசனே
எண்ணெய் ஊற்றுவதைப் போல் (தெளிவாக, மனது அலைபாயாமல்)
ஹரியினிடத்தில் மனதைக் கொடுக்க வரம் தருவாய் சம்போ (கைலாச)

அஹோராத்ரியலி நானு அனுசராக்ரனியாகி
மஹியொளகே ஜரிசிதெனோ மஹாதேவனே
அஹிபூஷணனே என்ன அவகுணகளெணிசலதே
விஹித தர்மதி விஷ்ணு பகுதியனு கொடோ சம்போ (கைலாச)


இரவும் பகலுமாக நான் உன் வேலைக்காரனாக வேண்டி
இந்த உலகத்தில் பிறந்தேனே மஹாதேவனே
பாம்பை அணிந்தவனே, என் கெட்ட எண்ணங்களை எண்ணாமல்
விதித்த தர்மங்களின்படி விஷ்ணுவை வணங்க பக்தி கொடு சம்போ (கைலாச)

மனசு காரணவல்ல பாப புண்யக்கெல்லா
அனலாக்‌ஷ நின்ன ப்ரேரணேயில்லதே
தனுஜ கதமன ஹரி தண்ட ப்ரணமமால்பே
மணிசோ ஈ ஷிரவ சஜ்ஜன சரண கமலதலி (கைலாச)


மனது காரணமில்லை பாவ புண்ணியங்களுக்கெல்லாம்
தீஜ்வாலை (போல் கண்களையுடையவனே) உன் ஆணையில்லாமல்;
(சர்வாங்கமும் தரையில் பட) சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்த செய்த என்னை
மன்னிப்பாய், இந்த (என்) சிரசை, படித்த, நற்குணங்களுடையவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குவேன் (கைலாச)

பாகீரதீ ஹரனே பயவ பரிஹரிசய்யா
லேசாகி நீ சலஹோ சந்தத சர்வதேவா
பாகவத ஜனப்ரிய விஜயவிட்டலங்க்ரி
ஜாகு மாடதே பஜிப பாக்யவனு கொடோ சம்போ (கைலாச)


பாகீரதியை காப்பாற்றியவனே என் பயத்தை போக்குவாய்
என்னை கரையேற்றுவாய், எப்போதும் அனைவருக்கும் தலைவனே
பக்திமான்களுக்கு பிரியமான விஜயவிட்டலனைக் குறித்து
சோம்பலில்லாமல் எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் பாக்கியத்தை கொடு ஈசனே (கைலாச)

***

கேட்ட வரங்களை தவறாது அளிக்கும் சிவனை வணங்கி, அந்த விஷ்ணுவை மறக்காமலிருக்கும் வரத்தை தருவாய் என்று என்ன அழகாய் வேண்டுகிறார், இந்த விஜயதாஸர்.

***

இந்த பாடலை நம்மவர் எப்படி பாடுறார் கேளுங்க. கண்டிப்பா மனசு உருகிடும். ஓம் நமச்சிவாய.



***

நம: பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவ..

***